மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாத முறியடிப்பின் போது, மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பியோனில்லா நி அலெய்ன் ஜெனிவாவில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
“மோசமான மனித உரிமை சரிசனைகளுக்கு நிலையான தீர்வைக் காணும், முக்கியமான வாய்ப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்து அதனை இல்லாமல் செய்யவும், புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.
புதிய சட்டம் உரிமைகளை நடைமுறையில் பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியுள்ளேன்.
பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு குறித்தும் கவனத்தில் கொண்டு வந்துள்ளேன். முழுமையான சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குறித்தும், எல்லா சிறுபான்மை குழுக்களும் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.
அத்துடன், நியாயமான, ஆய்வு செயல்முறைகளின் ஊடாக, மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்காக பொறுப்புக் கூற வேண்டும்.
எனது பணியகம் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கிறது. தொழில்நுட்ப உதவிகளும் சிறிலங்காவுக்கு தொடர்ந்து வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.