கிளிநொச்சியில் நீதி கோரி எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது!

0
235

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும் நீதி கோரி அவர்கள் எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது.

இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது மணிக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உளவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அங்கிருந்து ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு, அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமையால் நகர் வெறிசேடியிருந்தது. பாடசாலைகளுக்கு உள்ளுர் ஆசிரியர்கள் வருகை தந்திருந்த போதும் மாணவர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை. அரச திணைக்களங்களில் வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் பேருந்து போக்குவரத்து இன்மையால் பெருமளவு சமுகமளித்திருக்கவில்லை. திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் சேவைகள் இடம்பெறவில்லை. இவ்வாறு மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

கடந்த 2017-02-20 திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இரண்டு வருடங்களை கடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படாது தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், ஏனைய மதங்களின் குருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன்,சிறிதரன், .முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சுரேஸ் பிரறேமச்சந்திரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்கள்,பொது அமைப்புகள், யாழ் பல்கலைகழக சமூகம், தொழிற்சங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள்,என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

வேண்டாம் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலம் வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரனை வேண்டும்,

போதும் இந்தச் சோதனை, நமக்கு ஏனிந்த வேதனை

கண்ணீருடன்தான் நாங்கள் வாழ வேண்டுமா?

எங்கள் கண்ணீருக்கு முடிவேது எங்கள் துயருக்கு பதிலேது

எங்கள் துயரம் உங்களுக்கு வியாபார பொருளா?

எங்கள் கண்ணீர் உங்களுக்கு அரசியல் விளையாட்டா?

எங்கே எங்கே எங்கள் உறவுகள்

எத்தனை காலம்தான் நாம் தேடுவது அவரை

இன்னும் எத்தனை காலம்தான் காத்திருப்பது நாம்

இன்னும் எத்தனை தடவை எமாற்றுவீர் எம்மை

போதும் போதும் ஏமாற்று நாடகங்கள் இனியும் நாங்கள் ஏமாறிகள் அல்ல

பங்காளிகளே பதில் சொல்லுங்கள் எங்கள் உறவுகள் எங்கே என்று போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளையும் எந்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here