வலிந்து காணாமலாக்கபட்டோரின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ் மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன்., பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவடைந்துள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
வவுனியாவில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், உள்ளூர் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எனினும் தூர சேவை பஸ்கள் இயங்குவதாக செய்தியாளர் குறிப்பிட்டார்,
இதேவேளை மன்னார் மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட மக்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு வடக்கில் அனைத்து அரசியற் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரியும், சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டும், ஐ நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாவதையும் முன்னிட்டு இன்று பாரிய கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், ,அங்கிருந்து பேரணியாக கிளிநொச்சி டிப்போ சந்தி வரை சென்று, அங்கிருந்து ஏ 9 வீதியின் இரணைமடு டிப்போ சந்தி வரை சென்றது.
இதனால் ஏ9 வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.