சுற்றுச்சூழல் சீரழிவு; புவியை நெருங்கும் பேராபத்து!

0
1086

எமது புவியை நோக்கி வரும் சுற்றுச்சூழல் ஆபத்தின் தீவிரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் பார்க்கத் தவறி விட்டதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சர்வதேச அமைப்பான ‘பொதுக்கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனம்’ (ஐ.பி.பி.ஆர்)- வெளியிட்ட இந்த அறிக்கையானது எதிர்கால ஆபத்தை எமக்கு உணர்த்துகின்றது.மனிதர்களின் தாக்கமானது சமுதாயத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் அளவுக்கு  உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குப் பலவிதமான காரணங்களை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.

பருவநிலை மாற்றம், பலவகையான உயிரினங்கள் அழிந்து போதல், மண்ணரிப்பு, பெருங்கடல்களில் அமிலத் தன்மை அதிகரித்தல்,காடுகள் அழிப்பு ஆகியவை குறித்து பெரும் எச்சரிக்கைகளை விடுக்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் காரணங்கள் சுற்றுச்சூழலை பெரும் சீரழிவுக்கு இட்டு வருவதாகவும், அது ஆபத்தான நிலைக்குச் சென்று விட்டதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தச் சுற்றுச்சூழல் சீரழிவு மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. “இந்தப் பேரழிவுகளைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிவேகமாக மங்கி வருகிறது” என்கிறது ஐ.பி.பி.ஆர் அறிக்கை.

2005ஆம் ஆண்டிலிருந்து இந்த உலகில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு 15மடங்கும், தீவிரமான வெப்பநிலை 20மடங்கும், காட்டுத்தீ சம்பவங்கள் ஏழு மடங்கும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

பருவநிலை மாற்றம் குறித்து கொள்கை உருவாக்கத்தின் போது விவாதிக்கப்படுகிறது. ஆனால் வேறு சில காரணங்கள் பெரிதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

நிலத்தில் உள்ள மண் மிக வேகமாக அழிக்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் மண்ணரிப்புகளால் 30சதவீத பயிர் நிலங்கள் பயிர் செய்ய ஏதுவான நிலையை இழந்துள்ளன. 2050ஆம் ஆண்டிற்குள் புவியில் உள்ள 95சதவீத நிலப்பகுதியின் தரம் குறைந்து விடும்.

மனிதர்களின் செயல்களால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பேரழிவின் அளவு, வேகம் ஆகியவற்றின் தீவிரத்தன்மையை கோடிட்டு காட்ட இந்த யுகத்தை ‘சுற்றுச் சூழல் பேரழிவின் யுகம்’ என்று ஐ.பி.பி.ஆரின் அறிக்கை எச்சரிக்கிறது.

சுற்றுச்சூழல் மாற்றம் முந்திய காலத்தை விட மிக வேகமாக ஏற்படுகிறது என்றும், அது சமுதாயத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஐ.பி.பி.ஆர் கூறுவது சரியென லண்டன் பல்கலைக்கழகத்தின், ‘க்ளோபல் சேஞ் சயன்ஸ்’ பேராசிரியர் சைமன் லீவிஸ் தெரிவிக்கிறார்.

“உணவுப் பொருள்களின் விலையேற்றம், அதனால் மக்கள் மத்தியில் பதற்றம் என எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். மக்கள் இடம்பெயர்தல் அதிகமாக நடைபெறும். அதனால் சமூகத்தில் சச்சரவுகள் ஏற்படும்.இவை அரசியல் ரீதியாகவும் பதற்றங்களை ஏற்படுத்தும்” என்கிறார் சைமன்.

இந்த நூற்றாண்டில் அதிவேகமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்படுகிறது என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தப் பேரழிவுகளைத் தடுக்க அரசியல் ரீதியான தீர்வுகள் எடுக்கப்படுமா என்பதுதான் தெளிவாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here