அனைவரும் அணிதிரள்வோம்
பூரண கதவடைப்பும், கண்டனப் பேரணியும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு
ஊடக அறிக்கை
21-02-2019
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி
நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களை விசாரிப்பதற்காகவென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ராஜபக்ச அரசு மட்டுமல்ல ரணில் மைத்திரி அரசும் கூட நடைமுறைப்படுத்த தயாரில்லை என்பதனை கடந்த நான்கு ஆண்டுகளில் தெளிவாக நிரூபித்துக்காட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2017 மார்ச் மாத்தில் தமிழ் தலைமைகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச கண்காணிப்பை நீடித்தில் என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு வரும் மார்ச் மாதம் முடிவடைகின்றது.
இந் நிலையில் எதிர்வரும் பங்குனி மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தமிழ் தலைமைகளின் சம்மதத்துடன் சர்வதேச கண்காணிப்பை நீடித்தல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானமானது ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும் என்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் குடும்பங்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ஏனைவர்களுக்கும் நீதி கிடைக்கவிடாது தடுப்பதாகவுமே அமையும்.
எனவே இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக சர்வதே குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல் வேண்டுமென வலியுத்தி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடியும், பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
திகதி: 25.02.2019 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 8.30 மணி
இடம்: கிளி-கந்தசுவாமி ஆலய முன்றல்
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்