முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்….!

0
875

puthuvai 1ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது.
2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளையும் நந்திக்கடலில் பெருமையையும் ஊத்தங்கரைப் பிள்ளையாரின் மகிமையையுமே உச்சரிக்கும் புனிதம் மிக்க நாட்கள் அவை.

அதுவொரு செவ்வாய்க்கிழமை. பகல் 10மணி. தென்னைமரங்கள் சிலவும் மாமரமும் இன்னும் பெயர் நினைவில் வராத மரங்களும் சூழ்ந்த வீடு அது. குடிசையென்று சொல்ல முடியாத ஒரு அழகான குடிலென்று சொல்லலாம். மர நிழலில் ஈசிச்செயரில் சரிந்து ஏதோவொரு புத்கத்தில் மூழ்கியிருந்த முற்றத்துக் கவிஞனைக் குழப்பியது எனது குரல்.

வணக்கம் சொல்லி வரவேற்று….,என்ன பிள்ளை என்னமாதிரியிருக்கிறீங்கள் ? பிள்ளையள் வரேல்லேயா ?

அடுத்த வளவுப் போராளி குடும்பத்தின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் காட்ட வேலிக்கால் அழைத்த போது…வேலிக்காலை நீ காட்ட வேண்டாம் போய் பிள்ளையளைக் கூட்டிவா…! உரிமையோடு கோபித்தான் எங்கள் ஊர்முற்றக் கவிஞன். பிள்ளைகளையும் அழைத்து புதுவையண்ணனின் முன்னால் நிறுத்தினேன்.

தம்பிக்கென்ன பேர் ? பார்த்திபன்.
தங்கைச்சிக்கென்ன பேர் ? வவுனீத்தா.
உங்களுக்கென்ன பேர் ? மகள் அவரிடம் கேட்டாள்.
அம்மா மாதிரி மோளுக்கும் வாய்தான் கூட…..! எனக்குப் பேர் புதுவை இரத்தினதுரை. எனது பிள்ளைகளைத் தன் பேரக்குழந்தைகளுக்கு நிகராய் அவர்களுடன் உரையாடி குழந்தைகளுடன் சில துளிகள்

puthuvai 2தானும் குழந்தையாகி…..!

உங்களை அம்மா சொன்னவா மாமாவெண்டு கூப்பிடச் சொல்லி….நீங்க பாக்கிறதுக்கு அப்பு மாதிரியிருக்கிறீங்கள் ? எப்பிடியுங்களைக் கூப்பிடுறது ? எனது மகளின் கேள்வி என்னையும் வாய்மூட வைத்தது. நீ அப்புவெண்டே கூப்பிடாச்சி….அம்மா இன்னும் என்னை இளைஞனெண்டு நினைக்கிறா….எனச் சிரித்த அந்த மகிழ்ச்சியான தருணம்.

வாசலில் தோழி மலரின் மோட்டார் சயிக்கிளின் கோண் சத்தம் அது என்னைத்தான் அழைத்தது. கோணடிக்கிறவையும் உள்ளை வரலாம் தானே…..? பின்னேரம் அம்புலியக்காட்டைப் போறது வெளிக்கிட்டு நில்….சொல்லிவிட்டு உள்ளே வராமல் போனாள் மலர்.

2மணித்தியால உரையாடல் அன்ரி தந்த தேனீரும் பலாகாரத்தோடும் போனது.

எங்கை நிக்கிறாய் ?

இதிலையிருந்து 500மீற்றர் தூரத்திலதான்….நான் இருக்கும் வீட்டை அடையாளம் சொன்னேன்.

நாளைக்கு வா பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு மத்தியானம்…..நான் வாகனம் அனுப்பிறன். கிளிநொச்சிக்கு இரவு போவேண்டியிருக்கு இன்னொருநாள் வாறனே…!

இண்டைக்கு கிளிநொச்சி நாளைக்கு யாழ்ப்பாணம் நாளையிண்டைக்கு மல்லாவியெண்டு தொடர்ந்து அலுவல்தான் பிறகு உன்னைப் பிடிக்கேலாது…., பறவாயில்லை நாளைக்கு எனக்காக வெளி அலுவலெல்லாத்தையும் ஒருநாள் நிப்பாட்டலாம்….!

நேற்றும்; சிலபேர் வந்தவங்கள் உன்னை எங்கை நிக்கிதெண்டு விசாரிச்சவங்கள். நாளைக்கு அவையளையும் கூப்பிடுறேன்…எல்லாப் பழைய சினேகிதங்களையும் ஒரேயடியாச் சந்திக்கலாம். பிள்ளையளோடை உன்னைப் பாக்க வேணுமெண்;டும் சொல்லீட்டுப் போயிருக்கினம் சிலர்.

சில மணித்துளிகளில் அன்று விடைபெற்றுக் கொண்டு போய்விட்டேன்.

puthuvai 3மறுநாள் 11மணிக்கே வாகனம் வாசலில் வந்து நின்றது. ஒரு தம்பி உள்ளே வந்தான். வெளிக்கிட்டீங்களோ அக்கா ? அவன் எங்களை ஏற்றிக் கொண்டு போனான். ஊர் முற்றத்துக் கவிஞனின் வாசலில் இறங்கினோம். முற்றத்துக் கவிஞனின் முகத்தில் மாறாத புன்னகையும் பகிடியும் இடையிடை சின்னச் சின்னச் செந்தமிழோடும் அந்த மதியப்பொழுது மீளக் கிடைக்காது துயரே மிச்சமாகுமென்ற அசரீரி அன்றைக்குக் கேட்கவேயில்லை.

12.30இற்கு வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது. மேலும் இரண்டு மோட்டார் சயிக்கிள்களும் வந்து நின்றது. வரிசைகட்டி வந்து முற்றத்தில் கூடிய முகங்களின் சிரிப்பும் சினேக விசாரிப்புக்களும் அந்த மதியப்பொழுதை மாலைப்பொழுதின் மெல்லிய காற்றின் இனிமை போலாக்கியது.

காலம் கடந்து போனாலும் ஞாபகங்களில் மறக்கப்படாத பல முகங்கள். வயதின் ஏற்றமும் காலத்தோடான போரில் இழந்த வசந்தமும் பலரின் கண்களிலும் கதைகளிலும் மீதமாய் கிடந்த நினைவுகளில் நினைவுகளாகிக் கொண்டிருந்தது.

பிள்ளை இஞ்சை மரக்கறிதான் வற்றாப்பளை திருவிழாக்காலம் எங்கையும் மரக்கறிதான். சொன்னார் புதுவையண்ணா. நானும் இப்ப மச்சம் சாப்பிடுறேல்ல பிடிச்சது மரக்கறிதான். சொன்ன போது ஒருவன் சொன்னான். முழு மீனைச்சாப்பிட்டதையெல்லாம் நானும் பாத்தனான். அது அப்ப இது இப்ப….! சொன்னேன். முழுமீன் பற்றியொரு குட்டி அரட்டை அதிலேயே தொடங்கியது.

வாழ்க்கையில் மீளக் கிடைக்காத நாளாய் அன்று ஆளாளுக்கு பகிடியும் சிரிப்புமாய் நாங்கள்…! அவர்களில் ஒருவன் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதிகம் பேசாதவன் போல. ஏட தம்பி கதைக்க வேணும் பாக்க வேணுமெண்டு ரெண்டு கிழமையா சொன்னனியெல்லோ….? இந்தா பிள்ளை வந்திருக்கிறாளெல்லோ வுh கதைக்க வேண்டியதையெல்லாம் கதைச்சிடு. அவன் சிரிப்போடு அமைதியாக எட வாடா என ஒரு செந்தமிழ் வார்த்தையால் அழைத்தார்.

தங்கைச்சி உவர் மாமாவோ அல்லது அப்புவோணை ? என மகளைக் கேட்டார் முற்றத்துக்கவிஞன். அவள் சிரித்துவிட்டுச் சொன்னாள் நீங்கள் தான் அப்பு. பாருங்கோடா பிள்ளையளுக்கும் நான் அப்புவாகீட்டன்.

மகள் நேற்றுச் சொன்னது இன்று எல்லோருக்கும் சொல்லப்பட்டு மீண்டும் பகிடியும் சிரிப்புமாய்….! பிள்ளைகளோடு ஆளாளுக்கு நினைவுப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சரி அம்மாவும் வாங்கோவன் ஒரு படமெடுப்பம் என்றாள் ஒருத்தி. படமெடுத்தா ஆயுள் குறைஞ்சிடும் நான் எடுக்கேல்ல….! எனச் சொல்லி சமாதான காலத்தில் யாருடனும் நினைவுப்படம் எடுக்காமல் தவிர்த்தை இப்போதும் நினைத்து வருந்துவதுண்டு.

ஒன்றாய் சேர்ந்து படமெடுத்தவர்கள் பலர் நிரந்தரமாய் பிரிந்து போனதோடு புதிதாய் யாருடனும் படமெடுக்க வேணுமென்ற நினைப்பு வருவதில்லை. ஆனால் அவர்களெல்லாம் படங்களிலாவது மிஞ்சியிருக்கக்கூடிய வாய்ப்பை அன்று தவிர்த்ததற்கான தண்டனையைக் காலம் நிரந்தரமாய் தந்துள்ளது.
அது எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் நேரம். வருடக்கணக்கில் கிடைக்காது போன மகிழ்ச்சியை அன்ரியின் பரிமாறலில் பெற்றோம். எனக்கு நான் போடுறன் என எனக்கான சாப்பாட்டை கோப்பையில் போட்டதற்கு ஆளாளுக்கு நக்கலடித்தார்கள்.

உதென்ன சாப்பாடு…சரி சரி உடம்பைக் குறைக்கினம் போல….ஒரு குரல் இப்படியும் வந்தது. எல்லாருக்கும் மிச்சம் வைக்க வேணும் அதான் இவ்வளவு….! அது பறவாயில்லை நீ போட்டுச் சாப்பிடு பிள்ளை அன்ரி நிறையச் சமைச்சிருக்கிறா….! முற்றத்துக் கவிஞன் சிரிப்போடு சொன்னார். எனக்குப் பிடித்த வாழைக்காய் பொரியல் தொடக்கம் அறுசுவையென்றதற்கும் மேலாக அந்த மதியச் சாப்பாடு வாழ்வில் திரும்ப ஒருபோதும் கிடைக்காத உணவு.

சந்திக்க விரும்பியவர்கள் சந்திக்கக் காத்திருந்தவர்கள் என ஒரேநாளில் பலரை ஒரேயிடத்தில் சந்தித்துக் கொண்ட பசுமை நினைவு. ஒரு கட்டத்தில் சிலரின் திருமணம் காதல் பற்றியும் கதைகள் வந்தது.

அவர்களில் ஒருவன் முன் பக்கத்தால் தலைமுடி இதோ அதோ உதிர்ந்து முடியப்போகிறேன் என இரு பக்கத்தாலும் உள்ளே போயிருந்தது. அவனைக்காட்டிச் சொன்னார் முற்றத்துக்கவிஞன். எங்கேனும் ஒண்டைப்பாத்துக்கட்டடா எண்டா எங்கை கேட்கினம்…! அவன் சிரித்தான் பதில் சொல்லாமல்.

பிள்ளை அங்கினை ஆரையும் பார் பாத்துப் பேசு கட்டி வைப்பம்….! என்னமாதிரி ஒரு நல்ல பிள்ளையைப் பாப்பமோ ? கேட்ட எனக்கும் அவன் சிரித்தான். அண்ணை தேறாது…. எனச் சொன்னேன் முற்றக்கவிஞனைப் பார்த்து.

வந்ததிலிருந்து அதிகம் கதைக்காமல் இருந்தவன் முதல் முதலாய் வாய் திறந்து சொன்னான். கலியாணம் தான் வாழ்க்கையை நிறைவாக்குமோ ? இல்லையே நாங்க ஆரும் அப்பிடிச் சொல்லேல்லயே…! சொன்னேன். திருமணம் , ஆண் , பெண் உறவு , காதல் என அவன் அந்த நேரத்தின் சிறுதுளியை ஒரு விவாதமாகவே மாற்றினான்.

துவங்கிட்டாங்களடாப்பா குறுக்கே புகுந்தான் ஒருவன். பிள்ளை எங்களைப் பாக்க வந்திருக்கு அதோடை கதையுங்கோ பிறகு நாங்க விவாதிப்பம். இன்னொருவன் அந்த விவாதத்தை முற்று வைத்து நிறுத்தினான். அந்த விவாதத்தின் நீளம் அதன் சுவாரசியத்தை ரிசக்க விடாமல் இடையில் நிறுத்தியவனைக் குறுக்கிட்டுச் சொன்னேன். விடுங்கோ கேப்பம் அண்ணையென்ன சொல்றாரெண்டதை….! அந்த விவாதம் வேண்டாமென ஏகமனதாய் தீர்ப்பு வழங்கப்பட்டு புலத்தில் தாயகச் செயற்பாடுகள் பற்றிய விவாதத்தில் வந்து நின்றது கதை.

அந்த நாட்களில் தனக்குக் கிடைத்த புலத்து உறவுகளின் சுவைமிக்க அனுபவங்களை முற்றத்துக் கவிஞன் பகிரத் தொடங்கினார். ஓவ்வொரு தேசப்பற்றாளர்களையும் மதித்து அவர்களது உணர்வுகளையும் மதித்து பலரை நன்றியோடு நினைவு கொண்டார்.

மதியம் தொடங்கிய சந்திப்பு பின்னேரம் 5மணியாகியது. இனி விடைபெறுவோம் என்ற போது வந்திருந்த எல்லோரின் ஞாபகமாகவும் அவர்களது பெயர்களை எழுதித்தருமாறு ஒரு வெள்ளை ரீசேட்டை எழுதக் கொடுத்தேன்.

அழகழகாய் கையெழுத்துக்கள் அத்தோடு சிலர் சில வாசகங்களையும் எழுதினார்கள். நாங்கள் பிரியும் நேரம் ஆளாளுக்கு வரவு சொல்லி சிறப்பான நன்றி அன்ரியின் சமையலுக்கும் சொல்லிப் புறப்பட்டேன். மனம் முட்ட அந்த நண்பர்களின் நினைவுகளை நிறைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கடவையைத் தாண்டினேன்.

சிலர் தொலைபேசியிலக்கம் முகவரியைப் பெற்றுக் கொண்டார்கள். தங்கள் தொடர்பு முகவரிகளையும் எழுதித் தந்தார்கள். அப்போது அனேகம் பாவனையில் இணைய வசதிகள் இருந்த போதும் கடிதங்கள் எழுதுவதையே விரும்பினேன்.

கடிதங்களே காலத்தில் அழியாத பொக்கிசங்கள். தொடர்போடு இருப்போம் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம். கையசைத்து விடைதந்தோர் கைகுலுக்கிக் காதருகே நினைவு சொல்லி விடைதந்தோரின் பிரிவோடும் அந்த மணல் முற்றம் விட்டு வெளியேறினேன்.

முற்றத்துக் கவிஞன் தனது கையெழுத்தால் சிவத்தமையால் நான் கொடுத்த ரீசேட்டில் அன்பன் புதுவை இரத்தினதுரையென்று எழுதியிருந்தார். பலரது கையெழுத்துக்கள் ஞாபகவரிகள் என 3ரீசேட்கள் அவற்றைப் பத்திரமாய் உடுப்புப்பெட்டியில் பத்திரப்படுத்தினேன்.

ஒருநாள் எல்லா ஞாபகச்சேமிப்புக்களையும் சுமந்து தாண்டிக்குளம் தாண்டிய போது மறித்தார்கள் சோதனை செய்ய வேண்டுமென. அறிவமுது புத்தகசாலையில் வாங்கிய 125புத்தகங்களில் பலதை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அத்தோடு எனது பொக்கிசமாய் காத்துக் கொண்டு போன கையெழுத்துக்கள் தாங்கிய 3ரீசேட்களையும் எடுத்துக் கொண்டார்கள்.

உயிரைப் பிடுங்கியது போலிருந்தது. யாருடனும் படம் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் நினைவுகளை எப்போதும் நிரந்தரம் தருமெனக் காவி வந்த கையெழுத்துக்களையும் சிவிலுடையில் வந்து பரிசோதனை செய்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அவர்கள் யாவரும் இலங்கையரச புலனாய்வுத்துறையினராம். அதிகம் கதைத்தால் அங்கே கொண்டு செல்ல முயன்ற அவர்களது விதிக்கு உட்படாத புத்தகங்களுக்காக எதையும் செய்ய முடியுமென்றான் ஒருவன். சரி கொண்டு தொலையென நினைத்துக் கொண்டு அந்தத் தடையைத் தாண்டினேன்.

காலம் எங்கள் வரலாறு மீது காயங்களோடு துயரங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. தினம் தினம் நாங்கள் நினைத்திருந்த ஊரும் எங்கள் உறவுகளும் சொட்டுச் சொட்டாய் சாகக்கொடுத்து அழுத நாட்களின் துயரங்கள் ஆறாமல் இன்னும் ஒவ்வொரு மனசையும் அரித்துக் கொண்டிருக்கிறது.

எத்தனையோ பேரை இழந்து போனோம். ஏத்தனையோ பேரை இன்னும் தேடுகிறோம். எங்காவது அவன் அல்லது அவள் வாழலாம் வாழுகிறார்கள் என்கிற சின்னச் சின்ன நம்பிக்கைகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இழப்பதற்கு எதுவுமற்று எல்லாவற்றையும் இழந்துவிட்ட வலியின் ரணங்களோடு தோற்றுப்போய் துவண்டு போயிருக்கிறோம்.

காலம் தனது கைகளிலிருந்து எமக்காய் மிச்சம் வைத்துப் போயிருப்பது ஞாபகங்களை மட்டுமே. அந்த ஞாபகங்களில் எம்மோடு வாழ்கிற மண்ணின் புனிதர்களின் முகங்களும் அவர்கள் குரல்களும் இன்றும் கனவு வெளிகளெங்கும் அவர்களின் நினைவில் எங்களைக் கரைக்கிறது.

வன்னிக்குள் வாழக்கிடைத்த அந்த மாதத்தையும் அந்த மண்ணுக்குள் மீளக் கிடைத்த உறவுகளும் நெஞ்சுக்குள் பத்திரமாய்….! எத்தனையோ புதிய உறவுகளையும் இணைத்துத் தந்த அந்த 2003. இனியொரு போதும் திரும்பாத வசந்தமாக மனசோடு பதிவாக…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here