19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை சபையில் நிறைவேற்றியதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலநறுவையில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து தாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுகிறார் எனவும் நாடாளுமன்றில் தற்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றைக் கலைத்த பின் நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.