ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், மார்ச் 8ஆம் நாள் நண்பகல் அது வெளியிடப்படும் வாய்ப்புள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அதன் பிரதி ஒன்று வழங்கப்படும். அறிக்கையை ஆராய்ந்து பதிலளிப்பதற்கு வசதியாகவே இலங்கை அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி ஒன்று வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்னமும் இலங்கை அரசாங்கத்துடன் பகிரப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வரும் மார்ச் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உயர்மட்டக் குழுவொன்று பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவின் பிரதிநிதிகள் தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்துள்ளார்.