மன்னார் மனித புதைகுழி: அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை!

0
326

மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புகளின் எச்சங்கள் எக்காலப்பகுதிக்குரியது என்பது தொடர்பில் அறிவதற்கு காபன் பரிசோதனைக்காக அவை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் ஆய்வறிக்கை இன்று (16) அதிகாலை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கையளிக்கப்பட்டன.

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான காபன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் இன்று (16) சனிக்கிழமை அதிகாலை பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை (20) மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மேலும் சில என்பு மாதிரிகளின் எக்காலத்துக்குரியது என்பது தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான பிரதான விசாரணைகள் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக கடந்த வியாழக்கிழமை (14) இடம்பெற்ற நிலையில், சிறு பிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு மீட்க்கப்பட்டதாகவும், குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.

குறித்த எலும்புக்கூடு  18 வயதுக்குற்பட்ட சிறுவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன் அடிப்படையில், இதுவரை 300 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here