இலங்கையில் 1,486 பாடசாலைகளுக்கு மூடுவிழா!

0
334

நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. 

நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் 9,841 பாடசாலைகள் மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. 353 பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் என்ற அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றன. 

மாகாண சபைகளின் கீழ் 4,059 மூன்றாந்தர வகைப் பாடசாலைகள் இயங்குகின்றன. இவ்வகையான பாடசாலைகளில் 1,486 பாடசாலைகள் மாணவர்கள் இன்மை காரணமாக மூடப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இவை அனைத்தும் கிராமப்புறப் பாடசாலைகளாகும்.  மூடப்பட வேண்டிய பாடசாலைகளில் அதிகமான பாடசாலைகள் வட மாகாணத்தில் உள்ளன. இங்கு 275 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இதற்கு அடுத்த படியாக மத்திய மாகாணத்தில் 240, சப்ரகமுவ மாகாணத்தில் 230 என்ற அடிப்படையில் மூடப்பட வேண்டிய பாடசாலைகள் உள்ளன. 

மேல் மாகாணத்தில் 73, தென் மாகாணத்தில் 125, கிழக்கு மாகாணத்தில் 141, வடமேல் மாகாணத்தில் 133, வடமத்திய மாகாணத்தில் 111, ஊவா மாகாணத்தில் 158, பாடசாலைகள் மூடப்படும் ஆபத்தில் உள்ளன. 

மாவட்ட அடிப்படையில் ஆகக் கூடுதலாக மூடப்பட வேண்டிய பாடசாலைகள் கேகாலை மாவட்டத்தில் உள்ளன. இங்கு 119பாடசாலைகள் மூடப்பட வேண்டியுள்ளன. ஆகக்குறைந்த மூடப்பட வேண்டிய பாடசாலைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளன. இங்கு 16பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here