படகில் ரீயூனியன் தீவு சென்ற இலங்கையர்களை நாடுகடத்திய பிரான்ஸ்!

0
325

கடந்த பிப்ரவரி 4 அன்று பிரஞ்சு காலனி பகுதியான ரீயூனியன் தீவில் தஞ்சமடைய முயன்ற 70 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

பிரஞ்சு அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் நாடுகடத்தப்பட்ட இந்த இலங்கையர்கள் நேற்றுமுன்தினம் (பிப்ரவரி 14) இலங்கை சென்றடைந்துள்ளனர். 

சட்டவிரோதமான இப்படகு பயண முயற்சியில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு, கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள் இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளாகும்.

முன்னதாக, கடந்த ஜனவரி 26 அன்று தனக்கு சொந்தமான மீன்பிடி படகு கரைக்கு இன்னும் திரும்பவில்லை என படகின் உரிமையாளர் சுதர்சன் பெராரா நீர்கொழும்பு காவல்துறையிடம் புகார் ஒன்றை பதிவுச்செய்திருந்தார். 

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 70 பேரைக் கடத்திச்செல்ல ஒவ்வொருவரிடமும் 1 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில் 50 ஆயிரம்) முதல் 10 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய்) வரை படகோட்டி பெற்றதாக தெரிய வந்தது.

இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவு, பிரான்ஸ் நிர்வகிக்கும் தீவாக இருந்து வருகின்றது. இலங்கையிலிருந்து சுமார் 2200 நாட்டிகல் மைல் (4000 கிலோ மீட்டர்) தொலைவில் இத்தீவு உள்ளது. இத்தீவை நோக்கிய படகுப்பயணம் என்பது மீண்டும் ஆட்கடத்தலை புதுப்பிப்பதற்கான முயற்சி என இலங்கை மீனவத்துறையின் செயல் இயக்குனர் கல்பானி ஹெவாபதிரனா சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த முயற்சியும் நாடுகடத்தலின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here