ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையினர் 46 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
லேத்போரா எனும் இடத்திற்கு அருகில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வாகனங்கள் சென்றபோது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
70 பேருந்துகளில் சுமார் 2,500 ரிசர்வ் காவல் படையினர் சென்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-மொஹமத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் ரிசர்வ் பொலிஸ் வாகனங்கள் மீது மோதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆதில் அகமது என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கடும் கண்டனங்களை வௌியிட்டுள்ளனர்.
உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரை நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு எதிர்வினையாகவே இந்திய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.