முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன ஏற்கனவே இருந்ததென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோயிலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் பௌத்த மதகுரு ஒருவர் ஆக்கிரமித்தமை தொடர்பான வழக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணையின்போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாகிய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல மேற்குறிப்பிட்டவாறு சாட்சியம் வழங்கியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அமைந்துள்ள குருகந்த ரஜமகா விஹாரை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எனவே புராதன பௌத்த விகாரை அமைந்துள்ள இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய எதிர்தரப்பினர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோயிலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் ஆக்கிரமித்து பௌத்த மதகுரு ஒருவர் பௌத்த விஹாரையையும் புத்தர் சிலையையும் அமைத்து வந்திருந்தார்.
அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், அண்மையில் புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தைப்பொங்கல் தினத்தன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட மக்களுக்கும் பௌத்த மதகுருவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த சம்பவம், முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக வவுனியா சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக பலர் குற்றம் சுமத்தியிருந்ததோடு, தமிழ் தலைமைகளும் இந்த விடயம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.