ஆலையடிவேம்பில் நேற்று நடைபெற்ற காணாமற் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை நிராகரித்து முறைப்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் ஐ.நா. விசாரணையை வலியுறுத்தியதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு மீதான தமது நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தினர்.
இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் காணமற் போனோர், படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த விசாரணைகளுக்கு ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, காரைதீவு, நிந்தவூர், திருக்கோவில், இறக்காமம் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணமற் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பாக 97 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதேச செயலகத்துக்கு வந்த முறைப்பாட்டாளர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள் “ஐ.நா விசாரணையே வேண்டும். உள்நாட்டு விசாரணை வேண்டாம்”, “நாங்கள் கேட்பது எங்கள் சொந்தங்களை நீங்கள் தருவது ஆடு மாடு கோழிகளை”, “சர்வதேசத்தை ஏமாற்ற காணாமற்போனோர் விசாரணை இது எங்களையும் ஏமாற்றுகிறதே”,”நல்லிணக்கம் சொல்லும் அரசே ஐ.நாவின் விசாரணைக்குழுவை அழை”, “உணவின்றி தவித்து போராடுகின்றோம் எமது உறவுகளைத்தேடி” எனக் கோஷங்களை எழுப்பினர்.