தமிழ்த் தேசிய எழுச்சி நாள்களில் யாழ்.மாநகரில் களியாட்டங்களுக்குத் தடை!

0
566

தமிழ் தேசிய எழுச்சி நாள்களில் யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் சபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

“யாழ்ப்பாண மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாள்கள் மற்றும் நினைவேந்தல் நாள்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேளிக்கை விழாக்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும்.

குறிப்பாக தமிழ் இன அழிப்பு நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபம் திலீபனின் ஆரம்ப, இறுதி நாள் மற்றும் தமிழீழத் தேசிய மாவீரர் வாரத்தில் இவ்வாறான களியாட்ட, கேளிக்கை நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு மாநகர சபை அனுமதி வழங்கக் கூடாது.

மேலும் சபை எல்லைக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் சமூகப் பிறழ்வான சூது நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும்” என்று  பார்த்தீபன் சபையில் சமர்ப்பித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் மதுபான போத்தல்களை வெற்றி இலக்காக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வினையும் பார்த்தீபன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரேரணை மீது விவாதம. நடைபெற்றது. இதன் போது ஈ.பி.டி.பியின் உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.ரெமிடியஸ் பிரேரணையில் முதல் போராளியான சிவகுமாரன் உயிர்நீத்த ஜூன் 5ஆம் திகதியிலும் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

மாவீரர் வாரம் முழுவதிலும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட், நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கலாம் என்று  திருத்தத்தை முன்வைத்தார். அவற்றை உள்ளடக்கி சபையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here