காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை ஆக்கபூர்வமான தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் தமக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு கோரி மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்திவருகின்றனர். அடிக்கடி கொழும்பிலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் இவ்வாறு காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.
அந்தவகையில் தற்போது அம்பாறையில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அந்த அமர்வுகளை பகிஷ்கரித்து மக்கள் நேற்று முன்தினம் கல்முனையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நேற்று முன்தினம் கல்முனை தமிழ்ப்பிரிவுக்கான பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதனை பகிஷ்கரித்து பிரதேச செயலகத்தின் முன்னால் அமர்ந்து வாய்க்குக் கறுப்பு பட்டி அணிந்து பொது மக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கையில் நம்பிக்கை இழந்தமையினாலேயே இப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதெனவும் தமக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது காணாமல்போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஐக்கிய நாடுகள் .தலையீட்டோடு குறைந்தது 30 பேருடன் கூடிய புதிய ஆணைக்குழுவை நியமித்து அவர்களுக்கான தீர்வை வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது கோரியுள்ளனர்.
இதேவேளை ஆணைக்குழுவின் தலைவரிடம் காணாமல் போனோரின் உறவினர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். அந்த மகஜரில் குறித்த ஆணைக்குழுவுக்கு 2013 ஆம் ஆண்டு முதல் 2014 வரையான காலப்பகுதியில் கிடைத்த 15,000 முறைப்பாடுகளில் 2000 முறைப்பாடுகளையே முதற்கட்ட விசாரணையில் உள்வாங்கியிருப்பதாக ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஆணைக்குழுவின் செயற்பாடு பல வருடங்களுக்கு நீடிக்கப்படலாம் என்ற அச்சம் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆணைக்குழு கடந்த ஒன்றரை வருடகாலமாக இயங்கியுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் சாட்சியம் கொடுத்த 2000 பேருக்கு இதுவரை காலமும் எப்படியான முன்னேற்றங்கள் விசாரணையினூடாக ஏற்பட்டுள்ளன என்பதை ஆணைக்குழு இதுவரை அறிவிக்காத நிலையில் தகவலின்றி இருக்கிறார்கள்.
இவ்வாறான ஒருநிலை, தங்களுக்கும் ஏற்படுமோ என்று மக்கள் சந்தேகப்படுகின்றார்கள். எனவே இவற்றுக்கு அப்பால் சென்று சர்வதேசத்தின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர்களும் உள்ளடங்கலான விசாரணையே பக்கச்சார்பற்றதாக அமையும் என நம்புகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் மனங்களில் பல ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை இழுத்தடிக்கப்பட்டபின் செயலிழந்து போனதாகவே வரலாற்று அனுபவமானது கற்பித்திருக்கின்றது. எனவே கடந்த 1983ஆம் ஆண்டு தொடக்கம் வலியை சுமந்து கொண்டிருக்கும் இனம் இன்னும் பல வருடங்களைத் தொலைக்க விரும்பவில்லை. இதுபோன்ற பலவகையான குறைபாடுகள் ஆணைக்குழுவிற்கு பல இடங்களில் சிவில் அமைப்புக்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை என்றும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போனோரின் உறவுகள் மகஜரை கையளித்தபோது கருத்து வெளியிட்ட காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மக்களின் எதிர்ப்பை உரிய இடத்தில் தெரிவிக்கலாம். எனக்கு அதுபற்றி ஆட்சேபனை இல்லை. ஆணைக்குழுவிற்கு எதிராக எங்கு முறைப்பாடு செய்ய முடியுமோ அங்கு முறைப்பாடு செய்யலாம். விசாரணை நடத்தாமல் எப்படி தீர்வை எதிர்பார்ப்பது? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
விசாரணைகளை நாம் மேற்கொண்டால்தான் யார் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது பற்றி எமக்குத் தெரியும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க முடியும். விசாரணை செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். நாம் பக்கச்சார்பற்ற முறையில் நீதியான தீர்வினை சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெற்றுக் கொடுப்போம் என்றும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை எவ்விதமான தீர்வுகளும் கிடைக்காத நிலைமையே நீடித்துவருகின்றது. யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனோரை தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு காணாமல் போனோரின் உறவினர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் என்னதான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும் இதுவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே காணாமல் போனோர் தொடர்பாக விசாரிப்பதற்கு மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளில் இதுவரை விசாரணை அமர்வுகளை நடத்தியுள்ளது. எதிர்காலத்திலும் பல இடங்களில் விசாரணை அமர்வுகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளில் பங்கேற்று பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளித்துவந்தனர். ஆனால் அண்மைக்காலமாக ஆணைக்குழுவின் அமர்வை பகிஷ்கரித்துவரும் மக்கள் விசாரணை அமர்வுகள் நடைபெறும்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
உண்மையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் ஆணைக்குழுவின் அமர்வுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்று ஆராயவேண்டும். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இதற்கு முன்னர் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டும் ஆக்கபூர்வமான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலேயே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக யுத்தத்தின் பின்னர் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கூட முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே இவ்வாறான ஆணைக்குழுக்கள் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் கூடிய ஆணைக்குழுவை நியமிக்குமாறும் மக்கள் கோருகின்றனர். உண்மையில் காணாமல் போனோரின் உறவினர்கள் எவ்வாறான வலிகளையும் வேதனையையும் சுமந்துநிற்கின்றனர் என்பதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு மிக நீண்டகாலமாக தீர்வு கிடைக்காமையின் காரணமாக காணாமல் போனோரின் உறவினர்கள் விரக்திநிலையிலேயே வாழ்கின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
குறிப்பாக காணாமல் போன தமது உறவுகள் எப்போது திரும்புவார்கள் என்ற ஏக்கத்திலேயே காணாமல் போனோரின் உறவினர்கள் வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இந்நிலையில் அந்த மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும். வெறுமனே வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்காமல் செயற்பாட்டு ரீதியில் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பொறுப்பான பதிலளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
நன்றி : வீரகேசரி