வருமான வரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகவிருக்கிறார்!

0
212

Jaya-380-PTI2வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் 4 வழக்குகளை தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் கடந்த 1996-ம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்த வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சமரச தீர்வு மனு ஒன்றை வருமானவரித்துறையிடம், ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும் தாக்கல் செய்தனர்.

இந்த சமரச மனு மீது விசாரணை நடத்த வருமானவரித்துறையின் உயர் அதிகாரிகள் 3 பேர் கொண்ட கமிட்டி வருமானவரித்துறை சார்பில் நியமிக்கப்பட்டது.

இந்த கமிட்டி, கடந்த மாதம் 26-ந் திகதி ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோரின் சமரச தீர்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தியது.

விசாரணையில் சமரச மனுக்களை, வருமானவரித்துறையின் கமிட்டி ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தவும், ஜெயலலிதா, சசிகலாநடராஜன் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், வருமானவரித்துறை தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நேற்று காலை 10.30 மணி அளவில், சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா, சசிகலாநடராஜன் ஆகியோர் சார்பில் தனித்தனி மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்ட விவரம் வருமாறு, கடந்த மாதம் 26-ந் திகதி வருமானவரித்துறையின் சமரச தீர்வு கமிட்டி சொன்ன காம்பவுண்டிங் தொகை (4 வழக்குகளிலும் சேர்த்து வருமானவரி, அபராத தொகை மற்றும் இதர செலவுகள் அடங்கிய ரூ.1.99 கோடி) 27-ந் திகதி ஆடிட்டர் மூலம் செலுத்தப்பட்டு விட்டது.

இதை ஏற்றுக்கொண்டு வருமானவரித்துறை இறுதி ஆணை இன்னும் பிறப்பிக்கவில்லை. அந்த இறுதி ஆணை பிறப்பிக்கப்படும் வரை இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு, வருமானவரித்துறை வக்கீல் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு, நேற்று வேறு பணிக்காக சென்று விட்டார். இதனால் இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 3-வது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி கயல்விழி முன்னிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பினரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, வழக்கு விசாரணையை டிசம்பர் 11ந் திகதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கயல்விழி உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும், விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here