ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மதித்து நடக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தாய் என்ற முறையில் தமது புதல்வன் விடுவிக்கப்பட வேண்டும் என தாம் கோரவில்லை என தெரிவித்துள்ள அவர், இந்தநிலை சிறையடைக்கப்பட்டுள்ள எவருக்கும் நேரக்கூடாது எனவும் கோரியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொட்பில், தமிழக ஆளுநர் தீர்மானிக்கலாம் என இந்திய உயர் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய மாநில அரசாங்கம், நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் இவ்வாறு அறிவிக்கப்பட்டு 140 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநில ஆளுநர் விடுதலையினை தாமதப்படுத்தி வருவதாக அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார்.