இன்றுடன் 705 ஆவது நாளாக இராணுவ வசமுள்ள தமது சொந்த நிலங்களை கோரி தொடர் போராட்டம் நடாத்தி வரும் கேப்பாப்புலவு மக்கள், இலங்கையின் சுதந்திர தினமான இன்றையநாளில் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் .
இன்று இலங்கயைினுடைய 71ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. கேப்பாபுலவு மக்களின் காணிகளில் முகாம் அமைத்துள்ள இராணுவம் சுதந்திர தின நாளை இன்று சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில் குறித்த முகாம்களுக்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை கோரி தமது தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில், 705ஆவது நாளான இன்று சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய அமைதிவழியிலான போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர் .
கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு ,கறுப்பு ஆடைகளை அணிந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும் வகையில் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இப்போராட்டத்தில் கேப்பாபுலவு மக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள், உலகத்தமிழ் மாணவர் ஒன்றியமும் இணைந்த அமைப்புக்களும், ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான, து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், க.சிவநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,அருட்தந்தை சக்திவேல் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எழுந்து பறந்த காடு எழும்பி கொழும்புக்கு ஓடு , விளைந்த நிலமடா பகையே வீணாய் இருப்பதேன் நீ சுமையே , வீதியில் எங்கள் கேள்வி விரைவினில் உனக்கு வேள்வி ,தமிழர்கள் வயிற்றில் அடி தறுதலை உனக்கு ஏன் கொடி, இராணுவமே வெளியேறு ,நிலம் வேண்டும் அதுதான் எமது சுதந்திரம் ,எமது நிலம் எமக்கு வேண்டும்”உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு , எமது நிலம் எமக்கு வேண்டும் என்றவாறான பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போராடடத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலங்களுக்காக குரல் எழுப்பினர் .நூற்றுக்கணக்கான பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவை மதித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்தில் ஈடுபடடவர்களை பொலிஸார் மற்றும் இராணுவம் இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் இன்றும் ஈடுபட்டிருந்தனர் .