உடன்பாடு இல்லாத Brexit வெளியேற்றம் நிகழும் பட்சத்தில் லண்டனில் உருவாகக் கூடிய குழப்ப நிலைமையில் இருந்து அரச குடும்பத்தைப் பாதுகாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மகாராணி உட்பட அரச குடும்பத்தினரை லண்டனுக்கு வெளியே பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு நகர்த்த ஆயத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஞாயிறு பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
பனிப்போர் காலத்தில் நடைமுறையில் இருந்த இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் இப்போதுதான் மீண்டும் முன்னெடுக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
இறுதி அவகாச தினமான மார்ச் 29 ஆம் திகதிக்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி- உடன்பாட்டின் அடிப்படையில்- வெளியேற்றுவதற்கான நாடாளுமன்ற ஆதரவைத் திரட்டுவதில் பிரிட்டிஷ் அரசு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் நிலையில், உடன்பாடற்ற ஒரு வெளியேற்றம் நிகழும் பட்சத்தில் நாட்டில் பெரும் சிவில் குழப்பங்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடன்பாடற்ற வெளியேற்றம் நிகழும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப்பொருள்கள் புதிய சுங்கப்பரிசோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் அதனால் உருவாக்கக்கூடிய நீண்ட காலதாமதம் தட்டுப்பாடுகளை உருவாக்கலாம் என வர்த்தகத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இத்தகைய பின்னணியில் உருவாகக் கூடிய குழப்ப நிலைமைகளை கருத்திற் கொண்டே அரச குடும்பத்தினரைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளை மீள நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் லண்டனில் வசித்துவரும் அரச குடும்பத்தினரை அங்கிருந்து வேறு இடத்துக்கு நகர்த்துவதான திட்டம் பற்றிய இத்தகைய தகவல் தேவையற்ற பதற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கலாம் என்று கண்டனங்களும் எழுந்துள்ளன.
(நன்றி-குமாரதாஸன்)