பிரான்சில் மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ( Référendum) ஒன்றை நடத்தும் அறிவிப்பை ஜனாதிபதி மக்ரோன் எந்த நேரத்திலும் வெளியிடக்கூடும் என்று தகவல் கசிந்துள்ளது. உத்தரவு கிடைத்தவுடன் வாக்கெடுப்புக்கான பணிகளைத் தொடங்க ஆயத்தமாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பததாகத் தெரிகிறது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை ஆதாரம்காட்டி ஞாயிறு பத்திரிகை ‘Journal De Dimanche’ இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.
மே 26 இல், ஜரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நாளில், இந்தக் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவதற்கான உத்தரவை இன்னும் ஒருவாரத்தினுள் எலிஸே மாளிகை விடுக்கக்கூடும் என்றும் –
வாக்குச்சீட்டுகள் மற்றும் தேர்தலுக்கான காகிதாதிகளை அச்சிடுதல் உட்பட பூர்வாங்க ஆயத்தப்பணிகளை உள்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேர்தல்கள் பணியகம் ஏற்கனவே தொடக்கியிருப்பதாகவும் –
அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.ஆனால் இந்த வாக்கெடுப்பின் உள்ளடக்கம் அல்லது முன் மொழிவு என்னவாக இருக்கும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
பொதுமக்களால் முன்மொழியப்படுகின்ற கருத்துக்கணிப்பு முறைமை (Référendum d’initiative Citoyenne) வேண்டும் என்பது பிரான்ஸில் மஞ்சள் மேலங்கி போராட்டக்கார்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
நவம்பரில் ஆரம்பித்த மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்திருக்கும் நிலையில், தனது பிரஜைகளின் குறைகளை நேரில் கேட்டு அறிந்து விவாதிக்கும் தேசியப் பெரு விவாதங்களில் (Grand débat national) அதிபர் மக்ரோனும் கலந்துகொண்டு மக்களோடு நீண்ட உரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார். மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்திருந்த மக்ரோனின் மக்கள் செல்வாக்கு இந்தப் பெரு விவாதங்களுக்குப் பின்னர் சற்று அதிகரித்து வருவதாகப் புதிய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
(நன்றி:குமாரதாஸ்)