கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மாணவனை தமிழ் மக்கள் கூட்டணியினர் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தபோது, இயக்கம் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலையேற்பட்டிருக்காது என மாணவனின் குடும்பத்தினர் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவலை வழங்கியமைக்காக தாக்குதலுக்குள்ளாகி கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று வீடுதிரும்பிய கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனது வீட்டிற்கு நேற்று மாலை 5.00 மணியளவில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் கூட்டானியின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ரெஜி தலைமையில் நிர்வாக இணை உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிமலராஜன் மற்றும் மத்தியகுழுவின் நிவாகக்குழு உறுப்பினர் இரா.மயூதரன் உள்ளிட்டோருடன் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அந்த குடும்பத்திற்கான ஆதரவினைத் தெரிவித்திருந்தனர்.
மாணவனும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்தும் அதன் பின்னரான சமூக ரீதியில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் தமிழ் மக்கள் கூட்டணியினரிடம் எடுத்துக் கூறியிருந்த போதே இயக்கம் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.