இதுதான் மட்டக்களப்பின் வறுமை!
உலகில் பலர் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மட்டக்களப்பு மண்ணின் தமிழ் குடிகள் குடிசைகளுக்கே வழியின்றி தவிக்கும் அவலநிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இதைத்தான் நாங்கள் மட்டக்களப்பின் வறுமை என்று அடையாளப்படுத்த முடியும் இலங்கையில் குறிப்பாக வடகிழக்கு மண்ணில் இவ்வாறானதொரு வாழ்க்கையை நடாத்தும் ஒரே ஒரு இனம் என்றால் அது தமிழ் இனமாகத்தான் இருக்கமுடியும்.
இளவயது திருமணம் பாடசாலை செல்லாத மாணவர்கள் பாதுகாப்பற்ற வசிப்பிடம் பதிவு செய்யப்படாத குழந்தைப் பிறப்புகள் என ஒரு சமூகத்திற்கு தேவையான அனைத்து உரிமைகளையும் இழந்து ஒதுக்கப்பட்ட மக்களைப்போல் வாழ்ந்துவரும் இவர்கள் தேன் எடுத்தல் வேட்டையாடுதல் கூலி போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் இருக்கும் கித்துள்வேவ பகுதியில் உள்ள குளிர்ந்தசோலை என்னும் இடத்தில் வசிக்கும் இவர்கள் மட்டக்களப்பின் பலங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
காலத்திற்கு காலம் தங்களது வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டு வாழும் இக்குடும்பங்களின் வாழ்வாதாரம் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இந்த ஐந்து குடும்பங்களிலும் உள்ள சுமார் 06இற்கு மேற்பட்ட குழந்தைகள் பாடசாலை செல்லாமல் உள்ளதுடன் இந்த குழந்தைகள் வாழும் வசிப்பிடம் பாதுகாப்பற்றதாகவும் உள்ளது.
இது தான் இன்றுள்ள மட்டக்களப்பின் வறுமை இந்த நிலை தொடருமாக இருந்தால் மட்டக்களப்பு மண் தொடர்ந்தும் வறுமையில் முதலிடத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இவர்களின் வாழ்க்கையில் திருப்பம் வரவேண்டும் என்றால் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிய வழிகாட்டளையும் மேற்கொண்டால் இவர்களும் ஏனைய குடும்பங்களைப் போல் இயல்பான வாழ்க்கை நடாத்த கூடியதாக இருக்கும்.
மட்டக்களப்பின் வறுமை பற்றி பேசும் தலைவர்களும் சமூகவியலாளர்களும் அரசியல் வாதிகளும் தங்களது உதவிகளை இங்கிருந்து ஆரம்பிப்பார்கள் என்றால் மட்டக்களப்பை எதிர்காலத்திலாவது மீட்டெடுக்க முடியும்.