மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் விஞ்ஞான விரிவுரையாளர்; க. கோமலேஸ்வரனின் அகால மரணம் கலாசாலைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அன்னாரின் அகால மரணம் தொடர்பில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இச்சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று(31) காலை வீட்டிலிருந்து கலாசாலைக்கு பணிக்காக வரும் வேளையில் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி அன்னார் அகால மரணமானார். 49 வயதையே உடைய அன்னாரின் அகால மரணம் கலாசாலைக்கு மாத்திரமின்றி, குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரின் விஞ்ஞான ஆசிரியாக பணிபுரிந்த அவர் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞான விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான அன்னார் கல்வி முதுமானிப் பட்டத்தை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளதுடன் பட்டமேற்படிப்புக்கான பட்டங்களையும் பெற்று தான் பெற்ற கல்வியினூடாக பாடசாலை மாணவர்களினதும், கலாசாலையின் ஆசிரிய மாணவர்களினதும்; கல்வி முன்னேற்றத்திற்கு தனது கால நேரங்களைச் அர்ப்பணிப்பு செய்தவர்.
கலாசாலையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட அன்னார் இன, மத பிரதேச வேறுபாடின்றி அனைத்து ஆசிரிய மாணவர்களுடனும், கலாசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுடன் அன்பாகப் பழக்குவதுடன் தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் பிரதேச மேம்பாட்டுக்கான சமூக சேவைகளிலும்; தன்னை அர்ப்பணித்து செயற்படுபவராக இருந்தார்.
இவ்வாறு கலாசாலையின் மாணவர்களினதும், சக விரிவுரையாளர்களினதும் நன்மதிப்பை; பெற்ற அன்னாரின் இழப்பு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ள நலன்புரிச் சங்கம், அன்னாரின் அகால மரணத்தினால் துயரத்தில் உறைந்துள்ள குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும்; மேலும் குறிப்பிட்டுள்ளது.
தகவல்: எம்.எம்.ஏ.ஸமட், செயலாளர், ஊழியர் நலன்புரிச் சங்கம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு. 31.01.2019 – 077 -3112636