மன்னார் சதொச வளாகத்தில் காணப்படும் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வுகூட ஆய்விற்காக சமர்பிக்க சென்றமையால் கடந்த 21 ஆம் திகதி புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 300 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான மன்னார் சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவற்றில் 27 சிறார்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மன்னார் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்கா புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா நிறுவனத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த 25 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையை முன்னெடுக்கப்படவுள்ளது.
மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களில் தெரிவுசெய்யப்பட்ட 6 மாதிரிகளே மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன.
தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காபன் பரிசேதனை முடிவுகள் எதிர்வரும் 3 வாரங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.