இயற்கை சமநிலைப் பாதிப்பை எதிர்கொள்ளும் தாயகம்!

0
686

பெருமெடுப்பிலான நிதி முதலீட்டில் தொழிற்சாலைகளை ஒத்த விலங்கு வேளாண் பண்ணைகளை இலங்கையில் நிறுவுவதற்கு மேற்கு நாடுகளின் பெரு நிறுவனங்கள் தயாராகின்றன.

சுற்றுச் சூழலை நாசம் செய்து, சுதேச விலங்கினங்களை அடையாளமின்றி அழித்தொழித்துவிடக் கூடிய புதிய விலங்குப் பண்ணைகளின் விரிவாக்கம், மழை வெள்ளம், மண்சரிவுகள் என்று காலநிலைப்பாதிப்புகளை அடிக்கடிச் சந்தித்துவரும் இலங்கைத் தீவுக்குப் பொருத்தமற்றது, பாதகமானது என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது சிறிய அளவில் இயங்கும் பால் பண்ணைகளை சடுதியாக விரிவுபடுத்தி பெரு நிறுவனமயப்படுத்தப்பட்ட மேற்குலகின் பண்ணைகளை ஒத்த தரத்துக்கு மாற்றும் திட்டங்களோடு பல நாடுகள் இலங்கையில் களம் இறங்குவதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று, அதன் பாதகங்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 20 ஆண்டுகளில் தீவிரமான இயற்கைச்சீற்றங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் உலக நாடுகளின் வரிசையில் இலங்கையும், போட்டோ றிக்கோவும் (Puerto Rico) முதலிடத்தில் இருப்பதை குறிப்பிட்டுக் காட்டியுள்ள சூழலியலாளர்கள், இலங்கையர்களின் உணவுப் பழக்கவழக்கங்களுக்கும் சுற்றுச் சூழலியலுக்கும் இந்தப் பெரும் பண்ணை முறைமை ஊறு விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

கால்நடைகளை வகைதொகையின்றிப் பெருக்கி, அவற்றை அடைத்து வைத்துத் துன்புறுத்திப் பராமரித்து உச்ச லாபம் ஈட்டும் மனித நடவடிக்கையின் விளைவுகள் பூமியின் ஆயுளுக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதாக அஞ்சும் உலக விஞ்ஞானிகள், புவியை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசரமான, அவசியமான தனிமனித நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கின்றனர். அவற்றில் இறைச்சி மற்றும் பால் பொருட்களின் நுகர்வை இயன்றளவுக்குக் கைவிட்டுவிடுங்கள் என்பதே உலக மானிட சமூகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

இலங்கையில் போருக்குப் பின்னரான கால்நடைப் பண்ணைகளின் விரிவாக்கத்தை இத்தகைய சூழலியல் நிலைமையோடு பொருத்தி விமர்சிக்கும் ஆர்வலர்கள், வன்னி போன்ற தமிழ் பிரதேசங்களின் இயற்கைசார் வடிவமைப்புகளை, இந்தப் பெரும் பண்ணைகளின் வருகை சிதைத்துவிடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

(நன்றி: குமாரதாஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here