ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் முதலாளிகளாக இருக்கும் ஆந்திர முதலைகளை விட்டுவிட்டு மரம் வெட்டும் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தியும் வெறியாட்டம் போடும் ஆந்திர அதிகாரிகள், உச்சபட்ச கொடூரமாக 12 தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திர அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற கொடூரத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
திருப்பதி சேசாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகவும் அப்போது ஆந்திர வனதுறையினருக்கும் அவர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் இதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் திரைக்கதைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு கற்பனைக் கதையை சித்தரித்து 20 பேரைக் கொன்று வெறிட்டம் போட்டிருக்கிறது ஆந்திர அதிகாரத் தரப்பு. முதலில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகக் கசிந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடாக மாற்றப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட 20 பேர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்பது நெஞ்சை நொறுக்கக்கூடிய துயரமாக ஒவ்வொரு தமிழர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது. மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மரம் வெட்டுவது தவறு என்பது மறுக்க முடியாது. அதற்காக மனிதர்களை வெட்டுவது நியாயமாகிவிடுமா? வெட்டப்பட்ட மரத்தை நாளைக்கு ஒரு கன்று வைத்து நாம் உருவாக்கிவிடலாம். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை ஆந்திர அதிகாரிகளால் மீட்டுத்தந்துவிட முடியுமா? ஒரு மரக்கட்டைக்குக் கொடுக்கிற மரியாதை மனித உயிருக்குக் கிடையாதா?
அப்பாவித் தொழிலாளர்கள் மீது கொலைத்தாக்குதல் நடத்திய ஆந்திர அதிகாரிகள் செம்மரக் கடத்தலின் முதலாளிகள் மீது என்றைக்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் மரம் வெட்டியதாகச் சொல்லி தொழிலாளர்களைக் கைது செய்யும் ஆந்திர அரசு, அந்தத் தொழிலாளர்கள் யாருக்காக மரம் வெட்டினார்கள், அவர்களை மரம் வெட்டப் பணித்தது யார் என்பதை எல்லாம் என்றைக்காவது விசாரித்து அந்த முக்கியப் புள்ளிகளை என்றைக்காவது கைது செய்திருக்கிறார்களா? தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மேகதாது அணை கட்டக்கூடாது என்பதற்காக கர்நாடகா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமக்கான உரிமையைக் கேட்ட பாவத்துக்காக கேரளா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். சிங்கள இனவெறிக்கு ஆளாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் தமிழன் அடிவாங்கி வருகிறான். இந்நிலையில் செம்மரக் கடத்தல் எனக் கூறி அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாற்புறமும் தமிழனுக்கான பாதுகாப்பற்ற சூழலும் கேட்கத் துப்பற்ற நிராதரவையுமே காட்டுகிறது.
12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.