இனி என் மகன் இல்லாமல் நான் வீடு திரும்ப மாட்டேன் – அற்புதம்மாள் கோவையில் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

0
606

இதற்கு மேலும் தேர்தல் ஓட்டு அரசியலுக்கு என் மகனைப் பயன்படுத்த வேண்டாம். இனி என் மகன் இல்லாமல் நான் வீடு திரும்ப மாட்டேன்’’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோவையில் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டி, தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் அறப்போராட்டத்தைப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோவையிலிருந்து நேற்று தொடங்கியுள்ளார்.

`அநீதியே! 28 ஆண்டுகள் போதாதா? #28Years Enough Governor Moment என்ற பெயரில் தன் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியை முன்னிறுத்தி தமிழக மக்களிடம் மன்றாட இருக்கும் அற்புதம் அம்மாள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக இயக்கங்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரையும் சந்திக்க இருக்கிறார்.

பயணத்தைத் தொடங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “28 ஆண்டுக்காலமாகப் பேரறிவாளன் விடுதலைக்காகப் போராடி வருகிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புபடி தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேருக்கான விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர். ஆளுநர் அதில் உடனடியாகக் கையெழுத்திடுவதே முறை. ஆனால், ஆளுநர் சட்டத்தை மதிக்காமல் நான்கரை மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார்.

ஆளுநரின் நடவடிக்கை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை?. ஆகையால், அடுத்து என்ன செய்யலாம் என்று மக்களிடம் நியாயத்தைக் கேட்கவே இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளேன். மக்களின் கருத்துகளைக் கேட்டு முடித்த பிறகு, இறுதிப் போராட்டம் பற்றி முடிவெடுப்பேன்.

28 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகும் சிறையில் வைத்திருப்பது என்ன நியாயம்? ஆளுநரின் செயல்பாடு நீதியைப் படுகொலை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆளுநர் மதிக்க வேண்டும். என் மகன் உள்ளிட்ட ஏழுபேருக்கு விடுதலை கிடைக்கும் வரை எனது இந்தப் பயணம் தொடரும். தேர்தல் ஓட்டு அரசியல் எங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இது கேவலமான அரசியல். ஓட்டு அரசியல் லாபத்துக்காகத் தன் மகனை பயன்படுத்துவது இனியும் தொடரக் கூடாது. இனி என் மகன் இல்லாமல் நான் வீடு திரும்ப மாட்டேன்” என்றார் உருக்கமாக.

(நன்றி : விகடன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here