யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட புதிய நடைமுறை!

0
360

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான புதிய அனுமதியட்டை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி  இன்று தெரிவித்தார்.

இந்த நடைமுறை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்கள், பார்வையாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களும் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாதியர்கள் மற்றும் நோயாளர்களின் கருத்துக்களுக்கு இணங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட புதிய நடைமுறையை அமுல்படுத்தவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 1250 இற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. நோயாளர்கள் விடுதிகளில் சிகிச்சை பெறுகின்ற போது மூன்று வேளைகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஒரு நோயாளர்களைப் பார்வையிட அதிகமானவர்கள் வருவதனால், நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதுடன், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், கடுமையான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க சிரமப்படுகின்றனர்.

அத்துடன், ஒரு நோயாளரைப் பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வந்து அந்த நோயாளரைச் சுற்றி நிற்கும்போது, அருகில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே, இவ்விடயங்களை வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் தீவிரமாக ஆராய்ந்ததன் அடிப்படையில் ஒரு நோயாளியைப் பார்க்க நோயாளிக்கு அருகில் இருவர் மாத்திரமே செல்லமுடியும்.

பலர் வைத்தியசாலைக்கு வருகை தந்தாலும், அவர்கள் வைத்தியசாலையின் ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து, நோயாளியைப் பார்க்கச் சென்றவர் வந்ததன் பின்னர், இருவராகச்சென்று பார்வையிட முடியும்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கப்படும் அனுமதி அட்டையை பார்வையாளர்கள் கொண்டுசென்று இருவராக பார்வையிடுமாறும், அவ்வாறு பார்வையிடுவதனால், நோயாளர்களுக்கு ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் மற்றும் காற்றோட்டத்தை வழங்க முடியுமென்பதுடன், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here