மஞ்சள் மேலங்கி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான பெண்ணின் தலைமையில் பத்துப் பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டியல் இன்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தலைமை இல்லாத இந்த மக்கள் இயக்கம் வாக்கு அரசியலில் குதிக்கும் முடிவு அதன் ஒட்டுமொத்த போராட்டக்கார்களின் ஏகோபித்த விருப்பத்துடன் எடுக்கப்பட்ட ஒன்றா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சுமார் மூன்று மாத காலத்துக்கு முன்னர் சமூகவலைத்தள பிரசாரங்களோடு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய அமைப்பு நாடளாவிய ரீதியில் செல்வாக்குப் பெற்று பெரும் மக்கள் இயக்கமாக மாறியிருப்பது தெரிந்ததே.
‘மஞ்சள் மேலங்கியினர்’ என்னும் பெயரில் உத்தியோகபூர்வ தலைமையோ, ஒர் அமைப்பு ரீதியான வடிவமோ, மத்திய குழுவோ இன்றி வெறுமனே ஒரு சில பேச்சாளர்களுடன் உருவெடுத்த இவ்வியக்கம், நாடுமுழுவதும் மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறங்கி ஆட்சியை ஆட்டங்காணச்செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்தக் கட்டத்தில் –
மே 26 இல் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரான்ஸின் அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடித்துவரும் நிலையில், அதில் மஞ்சள் மேலங்கியினரின் திடீர் பிரவேசம் நிலைமையை மேலும் பரபரப்பாக்கியிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் அதிபர் மக்ரோனின் கட்சி, தீவிர வலது சாரியான மரின் லூ பென் அம்மையாரின் கட்சியுடன் (Rassemblement National) கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிலையில் இருந்தது. ஆனால் மக்ரோனுக்கு எதிரான மக்களின் சீற்றம், பேராதரவு அலையாகத் தம் பக்கம் திரும்பும் என்ற லூ பென் அம்மையாரின் நம்பிக்கை, மஞ்சள் அணியினரின் புதிய நகர்வால் தகர்ந்துபோயிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளை எட்டாத அதிபர் மக்ரோனின் ஆட்சிக்கு ஒரு பலப் பரீட்சையாக, கருத்துக்கணிப்பாகப் பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், மக்ரோனின் பதவிவிலகல் உட்பட அவரது கொள்கைகள் அனைத்தையும் எதிர்க்கும் மஞ்சள் இயக்கம், கட்சி வடிவத்தில் களம் இறங்குவது ஐரோப்பிய அரசியலில் பெரும் திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.
வலுவான ஐரோப்பிய ஆதரவுக் கொள்கைகளுடன் அதைப் பலப்படுத்த முனையும் மக்ரோன், உள்நாட்டில் மக்கள் செல்வாக்கை மோசமாக இழந்த ஒரு ஜனாதிபதி என்ற தர வரிசையில் உள்ளார்.
(நன்றி: குமாரதாஸன்)