தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நடாத்திய பொங்கல் விழா வெகு சிறப்பாக பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான இவிறியில் இடம்பெற்றது.
நேற்று (20.01.2019 )ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பொங்கலிடலுடன் பொங்கல் விழா ஆரம்பமாகியது. பொங்கலிடலின்போது இவ்றி நகரசபை துணை முதல்வர், இவ்றியில் அனைத்து சங்கங்களுக்குப் பொறுப்பானவர் அடங்கலாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப்பொறுப்பாளர் திரு.பாலகுமாரன், கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம், தமிழ்ச்சோலை தலைமைப் பணியக உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள், பிராங்கோ தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தமிழர் திருநாளைச் சிறப்பித்திருந்தனர்.
பொங்கலிடலின் பின்னர் விருந்தினர்கள் அனைவரும் மங்கல இசையுடன் மண்டபத்திற்குள் அழைத்துவரப் பட்டார்கள்.
மங்களவிளக்கினை விருந்தினர்கள் மற்றும் தமிழர் பிரதிநிதிகள் ஏற்றிவைக்க மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் மரியோஜ் புபே அவர்களின் பொங்கல் வாழ்த்துரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.
மங்கள இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின, முதலில் பிரெஞ்சு மொழியிலான உரை இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவர்களின் கிராமிய நடனங்கள், தமிழ் இணையவழி பட்டயக் கற்கை மாணவர்களின் பட்டிமன்றம் இணைய வழிக்கற்கை பட்டகர்களின் கவியரங்கம், இவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களின் சிலப்பதிகாரம் நாடகம், இணையவழி; பட்டயக் கற்கை மாணவரகளால் நடத்தப்பட்ட தூக்கணாங்குருவிக்கூடு; நாட்டுகூத்து என்பன சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், இவ்வாறான நிகழ்வுகள் மதம் கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்க வைக்கின்றது எனத் தெரிவித்த அதேவேளை, குறித்த நிகழ்வின் அவசியம் குறித்தும் தெரிவித்திருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)