நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு முக்கிய மான ஒவ்வொரு துறைக்கும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கான முன்னெடு ப்புகள் நடைபெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்க ளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படும் அது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேசியிருக்கிறேன்.
எமது அரசாங்கம் அமைக்கப்பட்டு நாம் கூறிய விடயங்களில் அனேகமானவற்றை செய்துள்ளோம். குறிப்பாக அரசாங்க அதிகாரிகளின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். எரிபொருட்களின் விலைக் குறைப்பு, கர்ப்பிணி தாய்மார்களுக்காக 20,000 பெறுமதியான போஷாக்குத் திட்டம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக்குறைப்புக்கள் என்பவற்றையும் இவற்றில் குறிப்பிடலாம். இவ்வாறான நடவடிக்கை மக்களுக்கு ஆறுதல் வழங்கியுள்ளது.
அரசாங்கத்திடம் பணம் போதுமானதாக இல்லை. அவைகள் உலக வங்கிகளிலும், இந்தியா மற்றும் கட்டார் போன்ற நாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளன. இவற்றை நாட்டுக்குள் மீள வருவரற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாதம் இறுதியில் ஜனாதிபதி முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைகள், தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சிலர் இதனை விரும்பவில்லை.
தேர்தலின் பின்னர் முழுப் பலத்துடனான ஒரு அரசாங்கம் அமைக்கப்படும் அதன் பின்னர் நாட்டின் முக்கிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், 10 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும்.
ஊழல் பிரச்சினை தொடர்பாக பாரிய ஆபத்து உள்ளது. இதனை உடனடியாக தீர்த்து வைக்க முடியாது. சட்டப்படி அதற்கான ஆவணங்கள், முறையான வழிமுறைகளை திரட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
சட்டம், நீதி, ஒழுங்கு அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அது ஷிராணிக்கு ஒரு சட்டமாகவும், பொன்சேகாவுக்கு இன்னுமொரு சட்டமாகவும் இருக்க முடியாது என்றார்.
பிரதமரின் அம்பாறை விஜயத்தின் போது அரசாங்க அதிகாரிகளுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேசிய கிழங்கு ஊக்குவிப்பு தினத்தையொட்டி விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்தின உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.