ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரிட்டனின் முடிவு பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது.
பிரதமர் தெரெசா மே அம்மையாரின் Brexit உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் 230 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருப்பதை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் பதவியில் இருக்கின்ற அரசாங்கம் ஒன்று நாடாளுமன்றத்தில் சந்தித்த மிக மோசமான தோல்வி இதுவாகும். இதனையடுத்து மேயின் அரசு மீது உடனடியாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டுவருகிறது தொழிற்கட்சி. இந்தப் பிரேரணை பெரும்பாலும் இன்று (புதன்) விவாதிக்கப்படலாம்.
மே அம்மையாரின் உடன்படிக்கைக்கு எதிராக அவரது அணியிலேயே 118 எம். பிக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதனால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்ற கோஷங்கள் எழுந்துள்ளன.
நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசு கவிழ்க்கப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய ஏனைய தரப்புகள் அடுத்த 15 தினங்களுக்குள் மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போதய சூழலில் நாடு பெரும்பாலும் புதிய பொதுத்தேர்தலைச் சந்திக்கும் நிலைமையே காணப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறுவதற்கு இன்னும் 72 நாட்களே அவகாசம் இருக்கின்றது(மார்ச் 29). இந்த விலகலுக்கான நடைமுறைகள், செயற்பாடுகளை உள்ளடக்கிய- பிரதமர் மேயின் – உடன்படிக்கையே நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.