மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.,16) காலை துவங்கி நடந்து வருகிறது. இதுவரை 19 வீரர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனை மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 988 காளைகள், 846 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் 75 வீரர்கள் வீதம் ஒவ்வொரு சுற்றாக களம் இறக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியை கண்காணிக்க 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்காக 15 டாக்டர்கள் அடங்கிய 10 மருத்துவக்குழுக்கள் மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 10 எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாடு பிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத மாடுகளுக்கு ஆம்னி கார், 7 இருசக்கர வாகனங்கள், கட்டில், பிரிட்ஜ், தங்கம் மற்றுமண் வெள்ளி காசுகள், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சிகிச்சைக்கு மறுத்து ஓடிய வீரர்!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் ராமராஜ், சிகிச்சை பெற மறுத்து தப்பி ஓடி உள்ளார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி அவர் தப்பியோடி உள்ளார்.
(நன்றி:தினமலர்)