இலங்கையால் இந்திய மீனவர்கள் படும் அவதி என்றுதான் தீரும் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை மீனவர்களோடு நமது மீனவர்கள் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேசும்போது பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று தோன்றிய போதிலும், நமது மீனவர்களின் துன்பங்கள் தொடர்கதையாகவே நீடிக்கின்றன.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, படகுகளுடன் சிறை பிடிக்கப்படுவது, மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடிக் கருவிகளையும், வலைகளையும் பறிமுதல் செய்வது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நின்றபாடில்லை.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து 37 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது, இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, 37 தமிழக மீனவர்களையும் சிறை பிடித்து, அவர்களுடைய விசைப்படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
கடந்த மாதம் கூட 24-3-2015 அன்று 9 மணி நேரம் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில், இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இலங்கை மீனவர்களிடம் தமிழக மீனவர்களின் சார்பில் இலங்கைக் கடல் பகுதிக்குள் ஆண்டுக்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி உள்ளிட்ட ஏழு அம்சக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசுப் பிரதிநிதிகளுடன் இலங்கை மீனவர்கள் விரைவில் பேசி மே மாதம் முடிவுகளைத் தெரிவிப்பது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டதாக ஏடுகளில் செய்தியும் வந்தது. இலங்கைச் சிறையிலிருந்து 54 தமிழக மீனவர்கள் விடுதலையாகித் தமிழகம் வந்தனர்.
இருநாட்டு மீனவர்களுக்கிடையே நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்சினை தீர்வு ஒன்றினை எட்டி விடும் என்று எண்ணியிருந்த வேளையில், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்கள், அந்த நாட்டுக் கடற்படைக்கு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், இலங்கை கடற்பகுதிக்குள்அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அனைத்து விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் போஸ் கூறும்போது, “இலங்கை அரசு திடீரென்று எல்லை தாண்டி வரும் மீனவர்கள் கைது, படகு பறிமுதல் என்று முடிவு செய்திருப் பது மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த முடிவுக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு வார்த்தை கூட எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை” என்று சொல்லி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், கொழும்பில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறும்போது, “இந்தியாவுடன் இலங்கைக்கு இருக்கும் நீண்ட கால நட்புறவுகள் பாதிக்கப்படாத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கும் கருத்து நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடியது என்றாலும்; மத்திய அரசு குறிப்பாக நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நமது மீனவர்களின் நெடுங்கால பிரச்சினைகளில் கவனத்தைச் செலுத்தி, உடனடியாக இந்திய மீனவர்களின் பிரதிநிதிகளையும், தமிழக அரசினரையும், அழைத்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபரிடம் நேரடியாகப் பேசி, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் கண்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.