உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் தைப்பொங்கல்!

0
693

‘தை பிறந்தால் வழி பிறக்கும்் என்ற முதுமொழிக்கு ஏற்புடையதாக, இன்றைய தினம் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். புத்தரிசி கொண்டு, பால்பொங்கல் பொங்கி, சூரியதேவனுக்கு சமர்ப்பணம் செய்து, சுற்றத்தார் புடைசூழ உண்டு அளவளாவி, இன்புற்றிருக்கும் நன்னாள் இன்றாகும்.

சமய நூல்கள் தைப்பொங்கல் திருநாளை ‘மகர சங்கராந்தி’ என்று கூறுகின்றன. சூரியன் தெற்கிலிருந்து வடக்காகப் பூமத்திய ரேகையைக் கடக்கும் போது தனு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்மாறுகின்றது. இந்த இடப்பெயர்ச்சி ‘மகர சங்கராந்தி’ எனப்படும். மகர சங்கராந்தியை உத்தராயண சங்கராந்தி என்றும் அழைப்பதுண்டு.

சூரியனின் இந்த திசைப்பெயர்வின் தொடக்க நாளே தைப்பொங்கல் ஆகும். உழவர்களுக்கு சாதகமான காலநிலையை இக்காலம் எற்படுத்துகிறது. தனது உழைப்பினால் விளைந்த பயிரினங்களின் அறுவடைக் காலம் இன்றுடன் ஆரம்பமாகின்றது. இந்த அறுவடைக் காலத்தை உழவனுக்கு பொற்காலம் என்று கூட சொல்ல முடியும்.

தமிழர் தமக்கு உதவியவர்களை என்றும் மறப்பதில்லை. தமிழரின் பண்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாக தமிழர்களுக்கே உரித்தான பண்டிகையாகவும் தைப்பொங்கல் விளங்குகின்றது. இந்து மதத்தில் வருகின்ற நிகழ்வுகள் அத்தனையும் சுகாதாரத்துடன் தொடர்புபட்டதாகவே அமைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் பொங்கலுக்கு முதல்நாள் போகிப்பண்டிகையும், மறுநாள் மாட்டுப் பொங்கலுமாக மூன்று முக்கிய பண்டிகைகள் வருகின்றன. இந்த மூன்று பண்டிகைகளையும் சரியாகப் பின்பற்றி அந்நாளில் மக்கள் சுகமாகவும் சந்தோஷமாகவும் அதேநேரம் இயற்கையுடன் ஒன்றியும் வாழ்ந்தார்கள்.

தமிழ் மாதங்களில் மார்கழியும் தையும் ஹேமந்தருது என அழைக்கப்படுவதுண்டு. இதில் தை மாதத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இது சூரியனை மையப்படுத்திக் காணப்படும் ஆண்டின் முதல் தொடக்கம். சூரியனின் இயற்கை நிறங்களுள் ஹேமந்தருவிற்கு உரிய நிறம் பொன் போன்ற மஞ்சள் நிறம். ‘ஹேம’ என்றால் பொன் என்று பொருள்படும்.

இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ சூரியஒளி அவசியமாக உள்ளது. கதிரவன் இவ்வுலகை காக்கின்றான். ஆதிசங்கரர் விடுத்த சண்மதங்களில் சௌரம்- சூரியனுக்கு ஒன்றாக விளங்குகின்றது.

உழவனால் அறுவடை செய்து கொண்டு வரப்பட்ட புத்தரிசியுடன் புதிதாக விளைந்த கரும்பு மூலம் பெறப்படும் பாணியையும், பயறு, மற்றும் மரமுந்திரிகை விதைகளையும் சேர்த்து பாலை ஊற்றி தயாரித்த பொங்கலையும் செங்கரும்பையும் மங்களம் தரும் மஞ்சள் கிழங்குடன் கொத்துகளையும் கதிரவனுக்கு படைப்பது பொங்கல் நாளின் சிறப்பம்சங்களாகும்.

மந்திரங்களில் உயர்ந்தது காயத்திரி மந்திரம். அந்த மந்திரமும் சூரிய பகவானைத்தான் போற்றுகின்றது. இந்த மந்திரம் விசுவாமித்திர முனிவரால் தைமுதல் நாளில் எடுத்துச் சொல்லப்பட்டதாக புராணத் தகவல் தெரிவிக்கின்றது.

கதிரவனை வணங்கும் வழக்கம் புராண காலம் முதலாக இருந்து வந்துள்ளதாக சமய நூல்களும் சூரிய வழிபாடு ரிக்வேதத்தில் தோன்றியுள்ளதாக புராணங்களும் கூறுகின்றன. இன்றைய நவீன விஞ்ஞான முடிவுகளின்படி சூரியஒளி பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி மிக்கது எனவும் ஒளியே மனித உயிர் வாழ்விற்கு முக்கியமானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்று விவசாயி மட்டுமல்ல சகல மக்களும் கூட்டுக் குடும்பமாக குதூகலித்த காலம். இன்று தனிவாழ்க்கை. அன்று குடும்பத்தில் பத்துக்கு மேற்பட்ட சகோதரர்கள் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்துளள்னர். இன்று ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை அல்லது இரு பிள்ளை. இதனாலேயே பண்டிகைகள் ப​ைழமையிலிருந்து விலகி ஒரு சடங்காக, பூசையாக, ஏன் மரபாக மட்டுமே கொண்டாடப்பட்டு வருகின்றன.

இன்று பட்டாடைக்கும் பட்டாசுக்கும் கொடுக்கின்ற அதீத கவனம் இறைவனுக்கு சமர்ப்பிக்கின்ற நைவேத்தியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. நகரமயமான இன்றைய வாழ்க்கையில் பழைமையை ஏற்படுத்துவது சிரமம். ஆனால் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் மரபு தவறாது பொங்கல் பண்டிகையினை நகரங்களில் கொண்டாடுவது பெருமைதரும் நிகழ்வு.

உலகில் வாழும் தமிழினம் சக இனங்களுடன் ஒன்றி உறவாடும் நற்பண்பினை கொண்டதாகும். இதனாலேயே பண்டிகைகள் யாவற்றையும் சக இன மக்களுடன் இணைந்து கொண்டாடி வருகின்றார்கள்.

எமது தாய் வீடான தென்பாரதத்தில் பண்டிகை பல சமயச் சடங்குகளுடன் கொண்டாடப்படுவதைப் போன்றே எமது நாட்டிலும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

தைப்பொங்கல் பண்டிகை என்பது சிறியோர் முதல் பெரியோர் வரை உள்ளம் மகிழ புத்துணர்ச்சி கொண்டு ஆனந்தப்படும் நாள். இத்தினம் சிறியவர்களுக்கு மகிழ்ச்சி தரும் நன்னாள்.இன்றைய தினம் அனைவருக்கும் சூரியதேவனின் அருள் கிடைப்பதாக அமையட்டும்.

ஆர்.நடராஜன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here