கென்யாவில் உள்ள கரிஸா பல்கலைக்கழகத்தில் அல்ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலியாகினர்.
இவர்களில் 143 பேர் மாணவர்கள். தவிர பொலிஸார் இருவர், ஒரு இராணுவ வீரர், ஒரு காவலர் என 4 பேர் பலியாகினர்.
சம்பவம் குறித்து கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் கெய்ஸரி தெரிவிக்கையில்,
கரிஸா பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் தீவிரவாதிகள் நால்வர் நேற்று (02) நுழைந்ததாகவும்
பயங்கர ஆயுதங்களுடன் சென்ற அவர்கள் அங்கிருந்த மாணவர்களை சில நொடிகளுக்குள் பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்ததாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் முஸ்லிம் அல்லாத மாணவர்களை எல்லாம் அடையாளம் கண்டு அவர்களை வரிசையாக அமர வைத்து இரக்கமின்றி சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனைய மாணவர்கள் அந்த கோர சம்பவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் உயிருக்கு அஞ்சி அங்குமிங்கும் ஓடியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், பல்கலைக்கழகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்ததை அறிந்த இராணுவம் மற்றும் பொலிஸார் அந்த வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனையறிந்த தீவிரவாதிகள் ஒரு சில மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டு விடுதியின் மையத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில், 2 பொலிஸாரும், ஒரு இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நெருக்கடி முற்றிய நிலையில், தீவிரவாதிகளுள் ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் பலர் காயமடைந்தனர்.
காலை தொடங்கிய தாக்குதல் மாலை வரை நீடித்ததாகவும் கிழக்கு கென்யாவில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவெனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
சோமாலியாவில் இருந்து வந்த தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இத் தாக்குதலில் ஈடுபட்டதாக அல்ஷபாப் செய்தித் தொடர்பாளர் அலி முகமது ரேஜ் கூறியுள்ளார்.