சமாதான காலம்.
புலம் பெயர் தேசியச் செயற்பாட்டாளர்கள் பலர், சுதந்திர பூமிக்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
விசேடமான பட்டறைகள், சந்திப்புக்கள், என்று வன்னி மண் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஒரு பட்டறைக்கு கேணல்.தீபன் வருகிறார்.
பட்டறையின் பொறுப்பாளர், அங்கு வருகை தந்திருந்த ஐரோப்பியச் செயற்பாட்டாளர் ஒருவரிடம் கேணல்.தீபனை அழைத்துச் சென்றார். இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்தபின் தீபன் பேச ஆரம்பிக்கிறார்.
”அண்ணே..இண்டைக்கு நீங்க எங்கட வீட்டுக்கு வாறீங்க. நீங்க இங்க வாறீங்க எண்டு அக்கா செய்தி அனுப்பியிருக்கிறா..”.
தீபனின் அன்புக்கட்டளையை மறுக்க முடியாமல், வந்தவரும் அவர் பின்னால் சென்றார்.
அது ஒரு குடிசை. அலரி மாளிகையல்ல.
ஒரு அறையில் தீபனின் அப்பா. மறு அறையில் தீபனும் இணையாளும். தகரக் கொட்டில்.
இதுதான் அக் கட்டளைத் தளபதியின் மாளிகை.
போர்அரங்க முன்னணிக்கட்டளைத் தளபதி ஒருவரின் வீடு குறைந்தபட்ச வசதியோடாவது இருக்கும் என்று கற்பனையில் சென்ற ஐரோப்பிய செயற்பாட்டாளருக்கு, அவர்களின் எளிமையான வாழ்க்கை அதிர்ச்சியளித்தது.
இரவு உணவு முடிந்ததும், சிறிது நேரம் பேசிவிட்டு உறங்க ஆயத்தமானார்கள். சென்றவருக்கு ஒரே குழப்பம். அக் குடிசையில் ஒரு மரக்கட்டில் மட்டுமே இருந்தது. வெளியில் ஒரு சிறிய விறாந்தை. மழை வேறு தூறிக்கொண்டிருந்தது.
”அண்ணே..நீங்க உள்ள இருக்கிற கட்டிலில் படுங்கோ. நானும் அவவும் வெளி விறாந்தையில் பாயைப் போட்டுப் படுக்கிறம்” என்றார் தீபன். விறாந்தையின் பெரும்பகுதியை மழைத்தூறல் நனைத்திருந்தது.
” இல்ல தம்பி, நீங்களும் அவவும் உள்ள படுங்கோ. நான் வெளில படுக்கிறன். எனக்கு இதெல்லாம் பழக்கம்” என்று வந்தவர் கூறியும் தீபன் கேட்கவில்லை. இருவரும் பிடிவாதக்காரர்.
” சரியண்னே விறாந்தையில படுங்கோ” என்று விளக்கை அணைத்து விட்டு உள்ளே சென்ற தீபன், சில நிமிடங்களில் வெளியே வருகிறார்.
”அண்ணே..பாத்தீங்களா..மண்டூகங்கள் ( பெரிய தவளைகள்) உங்களுக்கு மேல பாய்ஞ்சு விளையாடுதுகள்” என்றவர் ” நீங்க உள்ளே போய்ப் படுங்கோ” என்று பிடிவாதமாய் நின்றார்.
அண்ணரும் வேறுவழியின்றி உள்ளே சென்றார்.
முகட்டைப்பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்த அந்த புலம் பெயர்வாசி, ‘இவர்கள் பெரும் போராளிகள் மட்டுமல்ல…மானுட உறவுகளைப் போற்றும் எளிமையான சமூக மனிதர்கள்’ என்கிற பெருமிதத்தோடு உறங்கிப்போனார்.
இது சீலன் இதயச்சந்திரன் என்பவரின் முகநூலில் பதிவிடப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவு!
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.
வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.
புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.
அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.
சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.
அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.
ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.
நினைவுப்பகிர்வு:- வேங்கைச்செல்வன்.