நமது பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டது. பல்வேறு விடைகளுக்காக பிரபஞ்சத்தை அதிகமாக தேடும் போதும், அதிகமாக அதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதும், நமக்கு உண்மையில் விடயங்கள் எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளன என்பதை அறிந்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம், இந்த பரந்த விண்வெளியில் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதைக் காண்பிக்கிறது.
விண்வெளியில் உள்ளவை நம் புரிதலை முழுவதுமாக மாற்றக் கூட வாய்ப்புகள் உள்ளன. முன்பு சாத்தியமில்லை என நினைத்த விடயங்கள் தற்போது அதன் உண்மையான விளக்கத்தை வழங்கி சாத்தியமே என காண்பித்துள்ளன.
தற்போது வானியலாளர்கள், நம்மால் இதுவரை இருக்கும் என நினைத்துக் கூட பார்த்திருக்காத தூரத்து அற்புத உலகை, அதுவும் பலூன் வடிவ கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். நெப்டியூன் அளவிற்கு உள்ள இந்தக் கிரகம் பூமியிலிருந்து சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
ஜெனிவா பல்கலைகழகத்தின் அறிவியலாளர்கள் தலைமையிலான சர்வதேச ஆய்வுக்குழு இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளதால், இந்த தொலைதூர கிரகமானது பலூன் வடிவத்தில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.