டென்மார்க்கின் இரு பெரும் தீவுகளை இணைக்கும் Great Belt Bridge பாலத்தில் நேற்றுக் காலை இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்.
Zealand மற்றும் Funen தீவுகளை இணைக்கும் நீண்ட – பிரமாண்டமான- பொருத்துப் பாலத்தில் இன்று காலை சரக்கு தொடருந்து ஒன்று பயணிகள் தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. எனினும் கடும் புயல் காற்றுடன் கூடிய மோசமான காலநிலையால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது அருகருகே இரு தொடருந்துகளும் கடந்து சென்ற சமயம், கடும்காற்றினால் சரக்கு தொடருந்தின் பாகம் ஒன்று தூக்கிவீசப்பட்டதில், அதனோடு மோதுண்டு பயணிகள் தொடருந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
தலைநகர் Copenhagen நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்தில் ஆறுபேர் பேர்வரை உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாலம் உடனடியாக மூடப்பட்டு அங்கு உலங்குவானூர்திகளின் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடங்கப் பட்டுள்ளன . விபத்தில் டென்மார்க் தமிழர்கள் எவரும் பாதிக்கப்பட்டார்களா என்பது தெரியவரவில்லை.
தலைநகர் Copenhagen அமைந்துள்ள Zealand தீவையும் மற்றொரு நகரான Odense அமைந்துள்ள Funen தீவையும் இணைக்கும் இந்தப் பாலத்தை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் தொடருந்துகளும் கடக்கின்றன. டென்மார்க், ஜேர்மனி, சுவீடன் இடையிலான போக்குவரத்துக் கட்டமைப்புகளின் ஒரு பகுதியான இப் பாலம், 18 கிலோ மீற்றர்கள் நீளமானது.