சிவகாசி மெக்னீசியம் பவுடர் தொழிற்சாலையில் தீ: 4 பேர் பலி; மூவர் படுகாயம்!

0
217

sivakaasiசிவகாசி அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தாயில்பட்டியை அடுத்த எட்டக்காபட்டி கிராமத்தில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மெக்னீசியம் கட்டிகளை உருக்கி அலுமினிய பவுடராக தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையை இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்பிரபு(30), ஞானசேகரன்(40) சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு 3 தகர கொட்டைகைகளில், ஒரு அறையில் வழக்கம் போல் செவ்வாய்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில், மாலையில் மெக்னீசியம் கட்டிகளை உருக்கி அலுமினிய பவுடராக தயாரித்ததை அறையின் ஓரத்தில் கொட்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஏற்பட்ட உராய்வினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த எட்டக்காபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(35), சரவணன்(30), பெருமாள்சாமி(35), ராஜேஷ்கண்ணன்(35), ரெங்கசமுத்திரபட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(37), உரிமையாளர்களான வெங்கடேஷ்பிரபு, ஞானசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, அருகில் இருந்த தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் உடனே ஆலங்குளம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உடன், சிவகாசி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவும் தன்மையுடைய வேதிபொருள் என்பதால் ஈரமண் போட்டு அணைத்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இருவர் உயிரிழந்தனர். இன்று காலையில் தொழிற்சாலையின் உரிமையாளர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

ராஜேஸ்கண்ணன் என்பவருக்கு மட்டும் காலில் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே விபத்து நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலுமினிய பவுடர் தொழிற்சாலைக்கு கடந்த 6 மாதங்களு்ககு முன்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது என்றார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here