நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். அதேபோல தினேஷ் குணவர்த்தனவால் எதிர்க்கட்சி தலைவராக முடியாது. ஒரே கட்சி ஆளும் தரப்பாகவும் எதிர்த் தரப்பாகவும் இருந்து செயற்பட அனுமதியில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை உருவாக்க நாம் தயார் , சபாநாயகரிடமும் எமது விருப்பத்தை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்
பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பதில் இது தொடர்பாக வினவியபோதே அனுரகுமார திசாநாயக மேற்படி தெரிவித்தார் , அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தேசிய அரசாங்கத்தை சொந்தம் கொண்டாடுகின்றன .இரு கட்சிகளின் அங்கத்தவர்களும் அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு சிலர் தம்மை எதிர்க்கட்சியாக அடையாளப்படுத்திக்கொண்டு விவாதிக்கின்றனர் , பாராளுமன்றத்தில் நான்கு கட்சிகளே அங்கம் வகிக்கின்றன, ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு அரசாங்கமாக இருக்கையில் அதே கட்சி எவ்வாறு எதிர்க்கட்சியாக முடியும் , பாராளுமன்றத்தினை வேடிக்கையாகும் வேலையினை இவர்கள் செய்கின்றனர் . அதேபோல் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக வர முடியாது , அவருடன் இருந்த பலர் இன்று ஆளும் தரப்பாக மாறி அமைச்சு பதவிகளையும் எடுத்துள்ளனர் , இந்த நிலைமையில் தொடர்ந்தும் அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடியாது , நிமல் சிறிபால டி சில்வாக்கே இந்த நிலைமை எனின் தினேஷ் குணவர்தனவை எவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக்குவது , இவர்கள் நான்கு பேரை இணைத்துக்கொண்டு தனிக்கட்சியாக காட்டிக்கொண்டாலும் இவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அங்கத்தவர்களாகவே உள்ளனர் .
எனவே பாராளுமன்ற விதிமுறைகளை அனைவரும் பின்பற்றவேண்டும் , பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு அல்லாத இரண்டாவது பெரும்பான்மை கட்சி யார் என்பதை அவதானித்து அவர்களை எதிர்க்கட்சியாக தெரிவு செய்வதே வழக்கமானது. ஆனால் இன்று பெரும்பானை கட்சிகள் இரண்டுமே ஆளும் கட்சியாக இருப்பதனால் எதிர்க்கட்சிக்கான தகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர்க்கே உள்ளது . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக நியமிக்க வேண்டும். அதேபோல் நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக கூட்டணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்தினை பெறவேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடு . எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது இரு கட்சிகளின் இணைக்கப் பாட்டின் அடிப்பையில் தெரிவுசெய்ய முடியும் ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாக நாம் நியமிக்கப்படவேண்டியதே இப்போதைய அவசியமாகும் . எனவே இவ் விடயத்தினை நாம் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளோம் , பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய சரியான முறையில் எதிர்க்கட்சியை நியமிக்க வேண்டும் . இல்லையேல் அரசாங்கத்தின் தான்தோறித் தனமான போக்கினை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்