திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகே காரும், டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 7 உலமாக்கள் உள்பட 9 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள பள்ளப்பட்டியில் மக்தூனியா அரபிக் கல்லூரி உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த பி.தமிமுல் அன்சாரி (25), ப.சையது இப்ராஹிம் (29), சு.அப்துர் ரகுமான் (35), மு.பஜீருல்லா (32), மு.வலிவுல்லா (25), மு.கலீல் ரகுமான் (46), பொள்ளாச்சியைச் சேர்ந்த சௌ.அப்துல் சாலி (25), திண்டுக்கலைச் சேர்ந்த அ.அப்துல் ரஹீம் (40) ஆகிய 8 பேரும் உலமாக்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், பள்ளப்பட்டியைச் சேர்ந்த தாஜூதீன், சதக்கத்துல்லா ஆகியோர் கொடைக்கானலில் புதிதாகக் கட்டியுள்ள தங்கும் விடுதியின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்று “துவா’ நடத்துவதற்காக உலமாக்கள் 8 பேரும், அரபிக் கல்லூரி மாணவர் அ.அலியுடன் (22) பள்ளபட்டியில் இருந்தது கார் மூலம் கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை பிற்பகல் சென்றனர். கொடைக்கானலில் “துவா’ நடத்திவிட்டு நள்ளிரவில் காரில் திரும்பினர். காரை அரவக்குறிச்சியை அடுத்துள்ள குமரன்வலசைச் சேர்ந்த ப.மோகன் (48) ஓட்டினார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சேடப்பட்டி அருகே வரும்போது முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மோகனும், உலமாக்களில் கலீல் ரகுமான் தவிர எஞ்சிய 7 பேரும், மாணவர் அ.அலியும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கலீல் ரகுமான் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
விபத்துக்குள்ளான டேங்கர் லாரி, திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு பால் கொண்டு சென்றுள்ளது. விபத்து காரணமாக, சாலையோரப் பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்த செ.தங்கவேலுவை (42) கைது செய்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், மு.உதயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.