இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராம மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த மக்கள் மேற்கொண்டு வந்த தொடர் போராட்டமானது இரண்டு வருடங்களை அண்மித்துள்ள நிலையில் தமது சொந்த நிலங்களும் பாடசாலையையும் ஜனாதிபதியின் உத்தரவான டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விட்டுவைக்கப்டும் என்று எதிர்பார்ப்புடன் போரடடத்தை தொடர்ந்துவந்தனர்.
ஆனால் இன்றையதினம் குறித்த ஜனாதிபதியின் கட்டளையின் படி தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து தமது சொந்த காணிகள் அனைத்தும் உடனடியாக தமக்கு விடுவித்துத் தருமாறும் இராணுவத்தை தமது காணிகளை விட்டு வெளியேறுமாறும் தெரிவித்து திடீரென கேப்பாபுலவு பிரதான பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் காரணமாக கேப்பாபுலவு பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது .இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிஸார் மக்கள் அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கேப்பாபுலவு இராணுவ முகாமைச் சூழ நிறுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கான பணிகள் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நடைபெற்றுவருகின்றதாகவும் விரைவில் கேப்பாபுலவு மக்களுடைய காணிகள் தொடர்பிலும் ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கும் எனவும் 2019 ஜனவரி 25 ஆம் திகதிவரை ஒரு அவகாசத்தை வழங்கி இந்த இராணுவ முகாம் வாயிலை மறித்து மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிணங்க மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டுச் சென்றதோடு 25ஆம் திகதிக்கு முன்னர் உரியப் பதில் கிடைக்காத நிலை ஏற்பட்டால் மீண்டும் இராணுவம் கைப்பற்றியுள்ள தமது சொந்த நிலத்தினுள் தாம் பலவந்தமாகச் செல்லவேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துக் கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட மக்களையும் ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.