பரீட்சைப் பெறுபேறை நள்ளிரவில் வெளியிடல் மோசமானது:இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்!

0
209

இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.13 ஆண்டுகாலம் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து, பரீட்சை எழுதி பெறுபேற்றை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாணவர்களின் பெறுபேறுகளை பொருத்தமில்லாத நேரத்தில் அதுவும் நடுச்சாமத்தில் வெளியிடும் நடைமுறை இலங்கையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, கல்வி உளவியல் சார்ந்த கல்வியியலாளர்களும், பெற்றோர்களும்கூட தமது விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் மாணவர்சார்ந்த பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை ஏன் பின்பற்றப்படுகின்றது. என்பதனை பலர் வினாவாக பல ஆண்டுகள் முன்வைத்தும், விடை தெரியாமல் உள்ளனர்.இலங்கையில் பொருட்களின் விலைமாற்றம் உட்பட பல வெளியீடுகள் நடுச்சாமத்திலேயே அறிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணத்தை மக்கள் பிரதி நிதிகளாக பாராளுமன்றத்தில் உள்ளவர்களும் அங்கீகரிப்பது வேதனையான விடயம். மனித மனங்களின் தாக்கம், குழந்தைகளில் ஏற்படும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் இவையெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல் இவ்வாறு நடந்துகொள்வது விசனத்திற்குரியது மட்டுமன்றி மனித உரிமைகளை மீறும் செயல்.இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நடைமுறைகளைக் கைவிட்டு. மனித மனங்கள் பாதிக்கப்படாத வகையில், விசேடமாக பாடசாலைப் பிள்ளைகளின் மனங்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here