யாழில் பல இடங்களில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள்!

0
431

ஆயிரமாயிரம் உயிர்களை காவுகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் உருவெடுத்த ஆழிப்பேரலை, இலங்கையின் கரையோர பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்தவகையில், யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. குறிப்பாக வடமராட்சி கிழக்கு – உடுத்துறை ஆழிப்பேரலை நினைவாலயத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. உறவுகளை இழந்தவர்கள் கண்ணீர்மல்க தமது உறவுகளை நினைத்து இதன்போது அஞ்சலி செலுத்தினர்.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அதேபோன்று, நேற்றுக் காலை 9.25இற்கு யாழ். கச்சேரியில் ஆழிப்பேரலை நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுது. யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய கொடி ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக, யாழ்.பல்கலையில் ஆழிப்பேரலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் இந்நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here