தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் கொல்லப்பட்டு, இன்றுடன் பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த ஜோசப் பரராஜசிங்கத்தை அன்றைய அரசு பலியெடுத்தது. தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாக, தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, தெற்கிற்கும் உலகிற்கும் கூர்மையாக எடுத்துரைத்த பலர் அழிக்கப்பட்டனர். அப்படியான குரல்களில் ஒன்றே மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் குரல்.
ஒரு பத்திரிகையாளராக ஜோசப் பரராஜசிங்கம் செயற்பட்டவர். இலங்கை அரசுகளின் கிழக்கு மண்மீதான ஆக்கிரமிப்பு நெருக்கடிகளையும் மட்டகளப்பின் வாழ்வையும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் ஜோசப் வெளிப்படுத்தினார். தன்னுடைய மனைவியின் பெயரில், சுகுணம் ஜோசப் என்ற பெயரில் எழுதினார். மட்டக்களப்பில் ஊடக அமைப்பு ஒன்றை உருவாக்க முன் நின்றவர். அத்துடன் அதன் தலைவராகவும் செயற்பட்டவர்.
அறுபதுகளில் அரசியலுக்குள் நுழைந்த இவர் இருமுறை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த ஜோசப், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் அங்கம் வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
2005 மார்கழி 25 அன்று மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் கிறிஸ்மஸ் திருப்பலிப் பூசையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் வந்த இலங்கை அரசின் துணைப்படையை சேர்ந்தவர்களால் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் பலி கொள்ளப்பட்டார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது குரல் கொடுத்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் தமிழ் தேசத்தின் உயரிய விருதான மாமனிதர் விருது வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையுடன் தொடர்புடைய நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதி ஒருவர், மக்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்தமைக்காக அநியாயமாக பலிகொள்ளப்பட்டுள்ளார். இந்தக் கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை என்ன செய்வார்கள்? இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் நீதியை வழங்கவா? அல்லது சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கவா என்பதை காலம் நிரூபிக்கும்.
மனித வாழ்வின் விடுதலைக்காக யேசுபிரான் பிறந்த நாளில் எமது விடுதலைக்காக குரல் கொடுத்த ஒரு பிரதிநிதி, வழிபாட்டுத் தளமொன்றில் ஆயுததாரிகளால் அழிக்கப்பட்டார் என்பது, இந்த தேசத்தில், ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் எத்தகைய இடம் உண்டு என எடுத்துரைக்கிறது.