வெள்ளவத்தை பிரதேசத்தில் தனியார் விடுதி ஒன்றுக்குள் இருந்து நேற்று இந்திய தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஹோட்டல் தரப்பு வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 36 மற்றும் 37 வயதுகளை உடைய இந்திய பிரஜைகளான தம்பதியரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் மேலும் குறிப்பிட்டார்.
சடலங்களாக நேற்று இரவு மீட்கப்பட்ட இந்த தம்பதியர் கடந்த மார்ச் 27 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர். இந் நிலையில் வெள்ளைவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளனர். இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு வேளையில் வெளியே சென்றுள்ள இந்த தம்பதியினர் மீண்டும் பின்னிரவில் விடுதிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து தமது அறைக்கு சென்றுள்ள அந்த தம்பதியினர் நேற்று மாலை வரை அந்த அறையில் இருந்து வெளியேறாததை அடுத்து சந்தேக மடைந்த நிலையிலேயே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்றைய தினமே வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றவியல் பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந் நிலையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த தம்பதியர் இரவு நேர களியாட்ட விடுதிகளில் கேளிக்கைகளில் ஈடுபடுவது, கெசினோ விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து அவர்கள் இறுதியாக அருந்தியதாக சந்தேகிக்கப்படும் குளிர்பான போத்தல்கள் இரண்டு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த போத்தல்களில் விஷம் கலந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த தம்பதியர் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் இரண்டும் குறித்த தனியார் விடுதி அறையிலேயே உள்ள நிலையில் காலை நீதிவான் ஸ்தலத்தை பார்வையிடவுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகளும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.