கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது.
நேற்றிரவு (21) முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது.
இரணைமடுகுளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குளத்திற்கு வருகின்ற நீரின் அளவை விட வெளியேறுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் குறிப்பிடுகின்றனர்.
வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இருந்த போதிலும் மக்கள் பீதிகொள்ளத் தேவையில்லை என்றும் ஆனாலும் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வான்பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
36 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளமானது இன்று(22) நாற்பது அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் பலரும் ஈடுப்பட்டதோடு ,படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வீடுகள் வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளமை மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.
அத்தோடு மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.