பொருட்களை வாங்கிக்குவிக்கும் நுகர்வுக் கலாசாரமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கிறிஸ்தவ மக்களுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகிலேயே அதிகம் பேர் கொண்டாடும் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸின் போது பல்வேறு பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும். முக்கியமாக பரிசுப் பொருட்கள், புத்தாடைகள், கேக் உள்ளிட்ட இனிப்பு வகைகளுக்கு மக்கள் அதிகம் செலவிடுவது வழக்கம். சமீப ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை மிகப்பெரிய விற்பனைத் திருவிழாவாக பெருநிறுவனங்கள் கருதி அதற்கு ஏற்ப விற்பனை இலக்குகளை நிர்ணயிக்கின்றன. இந்நிலையில், போப் பிரான்சிஸ் இது தொடர்பாக வாட்டிகன் நகரில் கூறியதாவது: பல்வேறு பொருட்களை வாங்கி உங்களுக்குப் பிரியமானவர்களுக்குப் பரிசளித்து அவர்களை வியப்பில் ஆழ்த்துங்கள் என்று விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ஆனால், இந்த மாதிரியான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத்தான் இறைவன் விரும்புகிறாரா என்று யோசிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகையை இத்தகைய நுகர்வு கலாசாரமாக மாற்ற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது ஆக்கப்பூர்வமாக உதவி செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். நமது சமூகத்தில் எத்தனையோ அநீதிகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவற்றைப் போக்க நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்ய உறுதி ஏற்க வேண்டும். என்று போப் கேட்டுக் கொண்டுள்ளார்.